/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்லுாரிகளில் மாணவர்கள் விருப்பப்படி படிக்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்
/
கல்லுாரிகளில் மாணவர்கள் விருப்பப்படி படிக்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்
கல்லுாரிகளில் மாணவர்கள் விருப்பப்படி படிக்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்
கல்லுாரிகளில் மாணவர்கள் விருப்பப்படி படிக்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : செப் 09, 2025 06:31 AM

கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவர்கள் அனைவரும் கல்லுாரிகளில் தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவை தேர்வு செய்து நன்றாக படிக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் 'உயர்வுக்குப் படி' நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை துவக்கி வைத்து ஆய்வு செய்த கலெக்டர் பிரசாந்த் பேசியதாவது :
பொருளாதார ரீதியாகவும், குடும்ப சூழ்நிலை காரணமாகவும் உயர்கல்வி பயில முடியாத காரணத்தினால் தான் மாணவர்கள் படிக்கும் போதே புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு துறைகளின் சார்பில் கல்வி உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
10 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பாலிடெக்னிக் கல்லுாரியில் பயில தகுதியுடைவர்கள். பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ முடித்த மாணவர்களுக்கு 100 சதவீதம் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
மேலும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரியில் டயாலிஸிஸ் டெக்னீசியன், அனஸ்தீஸியா டெக்னீசியன் போன்ற 6 பாடப்பிரிவில் சான்றிதழ் படிப்புகளுக்கு இடங்கள் காலியாக உள்ளன.
மாணவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரியின் இணையதளத்திலும், மருத்துவக் கல்லுாரியிலும் சென்று விண்ணப்பிக்க வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, ஆசனுார், சங்கராபுரம் போன்ற இடங்களில் உள்ள தொழிற்பேட்டைகளில் வேலைவாய்ப்பு அதிகமாக கிடைக்கும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல்லுாரிகளில் மாணவர்கள் விருப்பத்தின்படி பாடப்பிரிவில் விண்ணப்பித்து படிக்க வேண்டும். நல்ல கல்வி பயின்றால் பெரிய அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் அனைவரும் தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவை தேர்வு செய்து நன்றாக படிக்க வேண்டும் என கலெக்டர் பேசினார். இதில் சி.இ.ஓ., கார்த்திகா, அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.