ADDED : ஆக 10, 2026 05:07 AM

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் பகுதியில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் பத்மஜா ஆய்வு செய்தார்.
சின்னசேலம் வட்டாரம், பங்காரம் கிராமத்தில் வேளாண் பொறியியல் துறையின் மூலம் வேளாண் இயந்திரமாக்கும் துணை இயக்க திட்டத்தின் நிறுவப்பட்ட சூரிய கூடார உலர்த்தியினை பார்வையிட்டு, அதன் பயன்பாடு, நன்மைகள், மானிய விபரங்களை கேட்டறிந்தார்.
அத்துடன் சங்கு பூ, ஆவாரம்பூ, செம்பருத்தி பூ, பன்னீர் ரோஜா, எலுமிச்சை, மாங்காய், முருங்கை இலை ஆகியவற்றில் இயற்கை முறையில் விளைவித்து சூரிய கூடார உலர்த்தியில் உலர வைத்து மதிப்பு கூட்டி மூலிகை தேநீர் பொடியாக மாற்றி விற்பனை செய்வது குறித்தும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து எலியத்துார் கிராமத்தில் தோட்டக்கலைத் துறை சார்பில் கருணைக் கிழங்கு சாகுபடி செய்த வயல், சின்னசேலம் - தோட்டப்பாடி மயூரா ஆற்றின் குறுக்கே 2.79 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலம் கட்டுமானப்பணி. பெத்தாசமுத்திரம் கிராமத்தில் விபி-ஜி ராம்(ஜி) திட்டத்தின்கீழ் குளம் அமைக்கும் பணி.
நயினார்பாளையம் கிராமத்தில் கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானம் ஆகியவைகளை நேரில் பார்வையிட்டு பணிகளை விரைவாக முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் நயினார்பாளையம் கிராமத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு சார்பாக வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுக்கும் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர், தொடர்ந்து கள்ளக்குறிச்சி புதிய பஸ் நிலையத்தினை பார்வையிட்டு, பஸ் நிலையத்தில் வாகன நிறுத்துமிடம், குடிநீர் வசதி ஆகிய அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
சின்னசேலம் பகுதியில் உள்ள கள்ளக்குறிச்சி ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தினை ஆய்வு செய்து, பால் உற்பத்தியாளர்களுக்கு கறவை மாடுகள் வாங்கிட கடனுதவிக்கான அனுமதி கடிதத்தை வழங்கினார்.
