/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தலைமை ஆசிரியர்களுக்கு கலெக்டர் பாராட்டு
/
தலைமை ஆசிரியர்களுக்கு கலெக்டர் பாராட்டு
ADDED : ஏப் 25, 2025 05:28 AM

கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளுக்கான ஊரகத் திறனாய்வு தேர்வில் அதிகளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற்ற, பள்ளி தலைமை ஆசிரியர்களை கலெக்டர் பாராட்டினார்.
பள்ளிக்கல்வித் துறை, ஊரகப்பகுதி அரசுப் பள்ளிகளில், 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஊரகத் திறனாய்வுத் தேர்வு நடத்தி வருகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.1,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதன்படி கடந்த, 2024ம் ஆண்டில் டிசம்பர் மாதம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்த தேர்வு எழுதிய மாணவர்களில், 57 பள்ளிகளில் இருந்து 114 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.1,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.
இந்த தேர்வில் அதிகபட்சமாக தியாகதுருகம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 10 மாணவியர், சித்தேரிப்பட்டு மேல்நிலைப் பள்ளியில், 8 மாணவர்கள், பல்லகச்சேரி உயர்நிலைப் பள்ளியில், 7 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
இந்த பள்ளி தலைமை ஆசிரியர்களை, கலெக்டர் பிரசாந்த் நேரில் பாராட்டி சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சி.இ.ஓ., கார்த்திகா, சி,இ.ஓ., நேர்முக உதவியாளர் தண்டபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.