/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நீர் நிலைகளில் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க கலெக்டர்... அதிரடி; கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு
/
நீர் நிலைகளில் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க கலெக்டர்... அதிரடி; கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு
நீர் நிலைகளில் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க கலெக்டர்... அதிரடி; கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு
நீர் நிலைகளில் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க கலெக்டர்... அதிரடி; கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு
ADDED : மே 19, 2025 11:36 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை வரும் 31ம் தேதிக்குள் அகற்ற அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. விவசாய நிலங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக, மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் கோமுகி, மணிமுக்தா அணைகள், 3 ஆறுகள், 212 ஏரிகள் உள்ளன. அதேபோல், பஞ்சாயத்திற்குட்பட்டு மொத்தம் 381 ஏரிகள் உள்ளன.
இரு அணைகள் மற்றும் ஏரிகளின் பாசனத்தை நம்பி ஆண்டுதோறும் ஒரு லட்சத்து 25 ஹெக்டர் பரப்பளவிற்கு மேல் பயிரிடப்படுகிறது. விவசாய பாசனம் மட்டுமின்றி பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் நீர் பிடிப்புகள் இருந்து வருகிறது. மழைக்காலங்களில் நீர் நிலைகளில் தேங்கும் தண்ணீரின் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகளில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இந்த மரத்தின் வேர் பல மீட்டர் ஆழம் வரை செல்லக்கூடியது. கடும் வறட்சியிலும் நிலத்தடி நீரை வெகுவாக உறிஞ்சும் தன்மை கொண்டது. இந்த மரம் உள்ள இடத்தில் ஒரு வித நச்சுத்தன்மை இருப்பதால், பிற தாவரங்களை எளிதில் வளர விடாமல் தடுக்கும்.
காஸ் அடுப்பு பயன்பாட்டில் இல்லாத காலத்தில் விறகு தேவைக்காக கிராம மக்கள் பலர் ஏரிகளில் வளரும் சீமைக்கருவேல மரங்களை வெட்டிச் சென்றனர். தற்போது பெரும்பாலும் வீடுகள், ேஹாட்டல்களில் சமையல் காஸ் சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. இதனால் விறகு பயன்பாடு முற்றிலும் குறைந்துள்ளது.
சீமைக் கருவேல மரங்களை வெட்டுவதற்கு முன்வாரததால் அணைகள், ஆறுகள், ஏரிகள் உட்புறம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இதன் காரணமாக, அதிகளவு மழை பெய்து ஏரிகள் நிரம்பினாலும் கோடை காலம் துவங்கும் முன்பே விரைவாக தண்ணீர் வற்றி விடுகிறது.
இதற்கிடையே ஏரியை ஒட்டியவாறு விளைநிலம் வைத்துள்ளவர்கள் சிலர், நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு செய்து வருவதால், பெரும்பாலான ஏரிகளின் பரப்பளவு குறைந்து வருகிறது. இதனால் மழைக்காலங்களில் குறைந்தளவு தண்ணீரே ஏரியில் தேங்கும் சூழல் ஏற்படுகிறது.
இதனால் விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். பருவ மழைக் காலத்திற்கு முன்பாகவே ஏரிகளில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றுவதற்கு நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப் பட்டது.
இதுதொடர்பாக கலெக்டர் பிரசாந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் கிராம ஊராட்சிகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களைக் கண்டறிந்து, வரும் 31ம் தேதிக்குள் முற்றிலுமாக அகற்ற வேண்டும்.
மேலும் அகற்றப்பட்ட இடங்களில் பலன் தரும் மரக்கன்றுகளை நட்டு வளர்த்துப் பராமரிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தமிழ்நாடு ஊராட்சிகளின் சட்டத்தின் கீழ் ஆக்கிரமிப்பு அகற்றுதலுக்கான நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.