/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு குறித்து... ஆலோசனை
/
பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு குறித்து... ஆலோசனை
பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு குறித்து... ஆலோசனை
பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு குறித்து... ஆலோசனை
ADDED : ஆக 08, 2024 01:46 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் அரசு பள்ளிகளில் மேலாண்மை குழு மறு கட்டமைப்பு தேர்தல் நடத்துவதுகுறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சியில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் தலைமை தாங்கினார். சி.இ.ஓ., முருகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். உதவி திட்ட அலுவலர் பழனியாப்பிள்ளை வரவேற்றார். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு மேலாண்மை குழு உறுப்பினர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும், ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற பார்வையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் பேசினார்.
கூட்டத்தில், சி.இ.ஓ., முருகன் பேசியதாவது: கல்வி உரிமைச்சட்டம் 2009ன் படி பள்ளியை நிர்வகிக்கும் முழு அதிகாரம் மேலாண்மை குழுவுக்கு உள்ளது. தற்போது உள்ள மேலாண்மை குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிதாக மேலாண்மை குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய 4 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அதன்படி, வரும் 10 மற்றும் 17 தேதிகளில் துவக்க பள்ளிகளிலும், 24ம் தேதி உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளிலும், 31ம் தேதி நடுநிலைப்பள்ளிகளிலும் தேர்தல் நடைபெறும். உண்டு, உறைவிட பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையவில்லை.
மேலாண்மை குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 24ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குழுவில், தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர், கல்வியாளர், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் தலா ஒருவரும், 2 உள்ளாட்சி பிரதிநிதிகள், 4 முன்னாள் மாணவர்கள், 14 பெற்றோர்கள் என மொத்தம் 24 பேர் இருப்பர். இதில் 12 பேர் கட்டாயம் பெண்களாக இருக்க வேண்டும். முன்மொழிவு அடிப்படையில் தேர்தல் நடைபெறும். உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்ட பிறகு, தலைவர், துணைத்தலைவர் தேர்வு செய்யப்படுவர். இதில், தலைவர் பதவிக்கு பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் தேர்தல் நடத்தும் அலுவலராக இருப்பர். துணை தாசில்தார் அல்லது துணை பி.டி.ஓ., பார்வையாளராக நியமிக்கப்படுவர். குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானம், தேவைகள் அனைத்தும் பெற்றோர் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த தீர்மானம், தேவைகள் அனைத்தும் கலெக்டர் மற்றும் துறை தலைவர்களுக்கு உடனடியாக செல்லுமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சி.இ.ஓ., முருகன் பேசினார். கூட்டத்தில், துணை தாசில்தார்கள், துணை பி.டி.ஓ.,க்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா நன்றி கூறினார்.