/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சுடுகாட்டு இடம் தனி நபருக்கு பட்டா? தாலுகா,பி.டி.ஓ., அலுவலகங்கள் முற்றுகை
/
சுடுகாட்டு இடம் தனி நபருக்கு பட்டா? தாலுகா,பி.டி.ஓ., அலுவலகங்கள் முற்றுகை
சுடுகாட்டு இடம் தனி நபருக்கு பட்டா? தாலுகா,பி.டி.ஓ., அலுவலகங்கள் முற்றுகை
சுடுகாட்டு இடம் தனி நபருக்கு பட்டா? தாலுகா,பி.டி.ஓ., அலுவலகங்கள் முற்றுகை
ADDED : ஜன 06, 2025 11:59 PM

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் அடுத்த செங்கனாங்கொல்லை கிராமத்தில் சுடுகாட்டு இடத்தை தனி நபர்களுக்கு பட்டா போடும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருக்கோவிலுார் அடுத்த மேமாளூர் கிராமத்தில் நீர்நிலை புறம்போக்கில் இருந்த ஏராளமான வீடுகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டது. இவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும் என அரசின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இதற்காக அருகில் இருக்கும் செங்கனாங்கொல்லை கிராமத்தில் உள்ள சுடுகாட்டு இடத்தில் பட்டா வழங்குவதற்காக வருவாய் துறை நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கனாங்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த நுாற்றுக்கு மேற்பட்டோர் நேற்று திருக்கோவிலுார் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தாசில்தார் ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், கிராம மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். சுடுகாட்டு இடம் என்பதால் பி.டி.ஓ., அனுமதி வழங்கினால் தான் பட்டா கொடுக்க முடியும், எனவே இது பற்றி பி.டி.ஓ.,வை சந்தித்து மனு கொடுங்கள் என அனுப்பி வைத்தனர்.
முற்றுகையில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள பி.டி.ஓ., அலுவலகத்திற்கு நடந்தே சென்றனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பி.டி.ஓ., மனுவாக அளிக்குமாறு கூறினர். மேலும் கிராம மக்களின் ஒப்புதல் இல்லாமல் தனி நபர்களுக்கு பட்டா வழங்கப்படமாட்டாது என்ற உறுதிமொழியும் வழங்கினர்.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றவும் கிராம மக்கள் முடிவு செய்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் தாலுகா அலுவலகம் மற்றும் பி.டி.ஓ., அலுவலக வளாகங்கள் பரபரப்புடன் காணப்பட்டது.

