UPDATED : ஆக 01, 2026 04:46 PM
ADDED : ஆக 01, 2026 04:41 PM
விழுப்புரம் சாலாமேடு என்.எஸ்.கே., நகரைச் சேர்ந்தவர் சுப்ரமணி, 76; இவர் கடந்த 29ம் தேதி விழுப்புரம் பாகர்ஷா வீதி மார்க்கெட்டிற்கு, காய்கறி வாங்கச் சென்றவர் வீடு திரும்பவில்லை. புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
திருவெண்ணெய்நல்லுார், திருக்கோவிலுார் சாலையில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் ரோந்து சென்றனர் அப்போத அங்கு லாட்டரி சீட்டு விற்ற அதே பகுதியைச் சேர்ந்த ராஜா, 51; என்பவரை கைது செய்தனர்.
தொழிலாளி மாயம்
விழுப்புரம் அடுத்த கொங்கம்பட்டைச் சேர்ந்தவர் பாலமுருகன், 32; கூலி த் தொழிலாளி. கடந்த 20ம் தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
லாரி மோதி மூதாட்டி பலி
வானுார் அடுத்த அச்சரம்பட்டு பகுதிதையச் சேர்ந்தவர் சுப்ரமணி மனைவி சரோஜா, 85; இவர் காலை 10:30 மணிக்கு, காய்கறி வாங்கிக் கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் இருந்து இரும்பை நோக்கிச் சென்ற டிப்பர் லாரி மோதியதில் சரோஜா சம்பவ இடத்தலேயே இறந்தார். ஆரோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மண் கொட்டிய தகரறு: 4 பேர்மீது வழக்கு
வளத்தியைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன், 65; இவருக்கு சிவசக்தி நகரில் வீட்டு மனை உள்ளது. ரவிசங்கர், 50; என்பவரின் வீட்டு மனையும் அருகில் உள்ளது. மனைகளுக்கிடையே இருந்த புறம்போக்கு இடத்தில், கடந்த 30ம் தேதி, ரவிசங்கர் மண் கொட்டினார். இதனால், இரு தரப்பினருக்குமிடையே தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். இரு தரப்பு புகாரின் பேரில், ரவிசங்கர், அரிகிருஷ்ணன் உட்பட 4 பேர் மீது வளத்தி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாலிபர் மாயம்: போலீஸ் விசாரணை
விழுப்புரம் அடுத்த அரியலுாரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அபிஷேக், 23; சென்னையில் உணவு டெலிவரி வேலை செய்து வருகிறார். கடந்த ஜூன் 1ம் தேதி ஊருக்கு வந்து, பிறகு சென்னைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வீட்டுமனை தகராறு: 6 பேர் மீது வழக்கு
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆனைவாரியைச் சேர்ந்தவர் விபிசிங், 35; அதே ஊரைச் சேர்ந்தவர் வேலாயுதம். இருவருக்குமிடையே வீட்டுமனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 29ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், வேலாயுதம் மற்றும் அவரது உறவினர்கள் 5 பேர் என 6 பேரும் சேர்ந்து விபிசிங்கை தாக்கினர். புகாரின்பேரில் வேலாயுதம் உட்பட 6 பேர் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
பெண்ணைத் தாக்கியவர் மீது வழக்கு
விக்கிரவாண்டி அடுத்த தருமாபுரியைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் மனைவி நாகம்மாள், 46; இவர் செஞ்சி, மழவந்தாங்கலைச் சேர்ந்த தனது தங்கை அஞ்சலை தேவியின் கணவர் பச்சையப்பன், 56; என்பவருக்கு ஒன்றரை ஆண்டிற்கு முன் 2 லட்சம் ரூபாய் கடன் கொடுத்தார். கடந்த 28ம் தேதி நாகம்மாள் பணத்தை கேட்டதால் ஆத்திரமடைந்த பச்சையப்பன், நாகம்மாளை தாக்கினார். புகாரின் பேரில், கெடார் போலீசார் பச்சையப்பன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.
கார் மோதி முதியவர் பலி
விழுப்புரம் அடுத்த கண்டமானடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி, 69; இவர், நேற்று தனது மொபட்டில் சென்னை - திருச்சி மார்க்கமாக சென்றார். பிடாகம் அருகே சென்ற போது, பின்னால் வந்த போர்டு கார் மொபட் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் மணி சம்பவ இடத்திலேயே இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
கொத்தனார் தற்கொலை
கள்ளக்குறிச்சி அடுத்த ஆலத்துாரைச் சேர்ந்தவர் ரமேஷ் மகன் இளையராஜா, 30; கொத்தனார். இவர், நேற்று முன்தினம் மதியம் வீட்டில், சேலையால் துாக்கு போட்டக் கொண்டார். உடன், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே, இளையராஜா இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வயிற்று வலி: பெண் தற்கொலை
விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரத்தைச் சேர்ந்த கண்ணப்பன் மனைவி லட்சுமி, 58; இவர், சில ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 31ம் தேதி காலை மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால் பூச்சி மருந்து குடித்து மயங்கினார். உடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் நேற்று காலை இறந்தார். விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மண் கடத்தல்: டிப்பர் லாரி பறிமுதல்
கள்ளக்குறிச்சி புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் ரகுநாத்குமார் தலைமையிலான அலுவலர்கள் நேற்று முன்தினம் மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பிச்சநத்தம் கிராமம் வழியாக வண்டல் மண் கடத்திச் சென்ற டிப்பர் லாரியை நிறுத்தியதும் டிரைவர் தப்பியோடினார். இதையடுத்து 3 யூனிட் வண்டல் மண்ணுடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
மாடுகள் இறப்பு: போலீஸ் விசாரணை
திருநாவலுார் அடுத்த கள்ளமேடு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார், 40; விவசாயி. இவருக்கு சொந்தமான 2 பசு மாடுகள், 2 காளைக் கன்றுகளை நேற்று முன்தினம் காலை 10:30 மணியளவில் தொட்டியில் தண்ணீர் வைத்துள்ளார். 11:30 மணி அளவில் வந்து பார்த்தபோது. 2 பசுமாடுகள், 2 காளை கன்றுகளும் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில், திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மது பாட்டில் விற்றவர் கைது
வரஞ்சரம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் காதர்ஷெரீப் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். கொங்கராபாளையம் அரசமரம் பகுதியில் டாஸ்மாக் மது பாட்டில் விற்ற செல்வம், 57; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 27 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
