/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குடிநீர் தேடி வரும் மான்கள் வேட்டையாடப்படும் அவலம்! வன விலங்குகளை காப்பதில் வனத்துறை மெத்தனம்
/
குடிநீர் தேடி வரும் மான்கள் வேட்டையாடப்படும் அவலம்! வன விலங்குகளை காப்பதில் வனத்துறை மெத்தனம்
குடிநீர் தேடி வரும் மான்கள் வேட்டையாடப்படும் அவலம்! வன விலங்குகளை காப்பதில் வனத்துறை மெத்தனம்
குடிநீர் தேடி வரும் மான்கள் வேட்டையாடப்படும் அவலம்! வன விலங்குகளை காப்பதில் வனத்துறை மெத்தனம்
ADDED : மார் 10, 2025 12:14 AM

கள்ளக்குறிச்சி வன வளம் நிறைந்த மாவட்டமாக விளங்குகிறது. இதில், கல்வராயன்மலையில் தொடங்கி கச்சிராயபாளையம், சங்கராபுரம், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், ரிஷிவந்தியம், திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை வரை தரைக்காடுகள் உள்ளது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் காப்புக் காடுகள் பெரும்பகுதி அழிக்கப்பட்டு வியாபார நோக்கில் யூகலிப்டஸ் மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்படுகிறது. இயற்கை காடுகள் அழிக்கப்பட்டதால் அங்கு பாதுகாப்பாக வசித்த பெரும்பாலான வனவிலங்குகள் இறந்தன.
தப்பிப்பிழைத்த மான், நரி, முயல், காட்டுப்பன்றி, மயில் உள்ளிட்டவைகள் பாதுகாப்பின்றி உணவுக்காகவும் குடிநீருக்காகவும் அலைந்து திரிகின்றன.
வனவிலங்குகளின் பாதுகாப்புக்காக காடுகளில் அமைக்கப்பட்ட நீர் நிலைகள் பராமரிப்பின்றி இருக்கும் இடம் தெரியாமல் போனது.
அதேபோல் மான், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட தாவர உண்ணிகள் அதிகம் விரும்பி உட்கொள்ளும் செடி, கொடிகளும், புற்களும் அழிக்கப்பட்டதால் அவைகளின் உணவு தேவை கேள்விக்குறியாகி விட்டது.
பருவ மழைக் காலங்களில் வனப்பகுதியில் குடிநீர் மற்றும் உணவு கிடைக்கும் என்பதால் பெரும்பாலும் அவைகள் வெளியே வருவதில்லை. தற்போது கோடை காலம் துவங்க உள்ள நிலையில் உணவு மற்றும் குடிநீருக்காக அருகில் உள்ள வயல்வெளிகளுக்கு வருவது அதிகரித்துள்ளது.
அவ்வாறு காடுகளை விட்டு வெளியே வரும் மான், காட்டுப்பன்றி, முயல்களை சமூக விரோதிகள் வேட்டையாடுவது தொடர்கிறது. மேலும், மான்கள் மின்வேலியில் சிக்கியும், நாய்கள் கடித்தும், வாகனங்களில் அடிபட்டும் இறக்கின்றன.
மாவட்டத்தில் சராசரியாக 3000 மான்களுக்கு மேல் காடுகளில் வசிக்கின்றன. சராசரியாக ஆண்டுதோறும் 200க்கும் மேற்பட்ட மான்கள் பல்வேறு காரணங்களால் உயிரிழக்கின்றன.
இவைகளுக்கு தேவையான குடிநீர், உணவு கிடைக்காததால் வயல் வெளிகளுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர்.
வன விலங்குகளின் பாதுகாப்பான இருப்பிடத்தை அழித்து யூகலிப்டஸ் மரங்களை வளர்த்து லாபம் ஈட்டி வரும் வனத்துறை அவைகளின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக உள்ளது.
சின்னசேலம் அடுத்த நைனார்பாளையம் பகுதியை ஒட்டியுள்ள காப்புக்காடு வன விலங்குகள் வசிப்பதற்கு பாதுகாப்பான இடமாக உள்ளது. இங்கு மான்களின் சரணாலயம் அமைத்து அவைகளின் உணவு, குடிநீர் தேவையை பூர்த்தி செய்து பாதுகாத்திட விரிவான திட்டத்தை செயல்படுத்த அரசின் கவனத்திற்கு வனத்துறையினர் கொண்டு செல்ல வேண்டும் என்பது வனவிலங்கு ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
அதுவரை வன விலங்குகளுக்கு தேவையான குடிநீரை காடுகளின் நடுவே ஆங்காங்கே சிறு குட்டைகளை அமைத்து தண்ணீரை தேக்கி வைத்து அவைகள் குடிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்.