தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ குறைகேட்புக் கூட்டத்தில் மனு பதிவு செய்வதில் தாமதம்:பல மணி நேரம் காத்திருந்த மக்கள் கடும் அவதி

குறைகேட்புக் கூட்டத்தில் மனு பதிவு செய்வதில் தாமதம்:பல மணி நேரம் காத்திருந்த மக்கள் கடும் அவதி

குறைகேட்புக் கூட்டத்தில் மனு பதிவு செய்வதில் தாமதம்:பல மணி நேரம் காத்திருந்த மக்கள் கடும் அவதி


UPDATED : செப் 21, 2026 11:38 PM

ADDED : செப் 21, 2026 05:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 21, 2026 11:38 PM ADDED : செப் 21, 2026 05:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் மனுவை பதிவு செய்ய தாமதம் ஆனதால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க மனுதாரர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடக்கிறது. மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், பொது சங்க நிர்வாகிகள் மற்றும் அமைப்பினர் ஆகியோர் தனி நபர் பிரச்னை, பட்டா கோருதல், தொழில் தொடங்க கடனுதவி, பொது பிரச்னைகள், சாலை, குடிநீர், தெருமின் விளக்கு என அடிப்படை வசதிகள் கோரிக்கை சார்ந்த மனுக்கள் அளிக்கப்படுகிறது.

கலெக்டரிடம் நேரடியாக மனு வழங்குவதால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஏராளமான பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் மனு அளிக்க வருகின்றனர்.

பொதுமக்களின் மனுவை பதிவு செய்ய 11 கம்ப்யூட்டர்களுடன் தனி 'கவுன்ட்டர்' அமைக்கப்பட்டுள்ளது. மனுவைப் பெறும் அலுவலர்கள், மனுதாரரின் பெயர், முகவரி, மொபைல் எண், என்ன பிரச்னை தொடர்பான மனு, எந்த துறை சார்ந்தது என்பதை கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்து ஒப்புகை சீட்டினை வழங்குவர்.

தொடர்ந்து, மனுவில் 'சீல்' வைக்கப்படும். இதற்கு பின்னரே மனுதாரர்கள் அதிகாரிகளை சந்தித்து மனுவை வழங்க வேண்டும். 'கவுன்ட்டரில்' 8 கம்ப்யூட்டர்கள் மனு விபரங்களை உள்ளீடு செய்யும் பணியும், 3 கம்ப்யூட்டர்களில் மனுவை 'ஸ்கேன்' செய்யும் பணியும் நடக்கிறது.

ஒரு மனுவில் உள்ள விபரத்தை ஆன்லைனில் பதிவு செய்ய 5 முதல் 10 நிமிடங்கள் தேவைப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சமாக 12 மனுக்களை மட்டுமே பதிவு செய்ய முடியும் என்பதால் மனு அளிக்க வரும் பொதுமக்கள் வரிசையில் நீண்ட காத்திருக்க வேண்டிய நிலை நீடித்து வருகிறது.

குறிப்பாக, மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் இருந்து வருபவர்கள், கர்ப்பிணிகள் முதியோர்கள் மனுக்களை பதிவு செய்ய முடியாமல் கடும் சிரமமடைகின்றனர்.

நேற்று நடந்த கூட்டத்தில், மனுவை பதிவு செய்வதற்காக பல மணி நேரம் காத்திருந்த பொதுமக்கள் பணியில் இருந்த அதிகாரிகளை கடிந்து கொண்டனர்.

நிற்க முடியாத முதியவர்கள் நேரடியாகச் சென்று மனுவை பதிவு செய்யுமாறு கெஞ்சினர். மதியம் 1:30 மணிக்கு மேல் பதிவு செய்ய முடியாது என தெரிவித்ததால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர். எனவே, மனு பதிவு செய்யும் கவுன்ட்டரில் கூடுதல் கம்ப்யூட்டர் வசதிகளை ஏற்படுத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் குவியும் மனுக்கள் நேற்று நடந்த குறைகேட்புக் கூட்டத்தில், பட்டா மாற்றம், குடிநீர் மற்றும் சாலை வசதி ஏற்படுத்தி தருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகள், புகார்கள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 820 மனு, மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து 70 மனு என மொத்தமாக 890 மனுக்கள் பெறப்பட்டது. கடந்த 7ம் தேதி நடந்த கூட்டத்தில் 779 மனுக்கள் பெறப்பட்டது. மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் 5 திங்கட்கிழமைகளில் நடந்த கூட்டத்தில் மொத்தமாக இதுவரை 3,096 மனுக்கள் பெறப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us