/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மரவள்ளிக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க கோரிக்கை! நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என அறிவிப்பு
/
மரவள்ளிக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க கோரிக்கை! நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என அறிவிப்பு
மரவள்ளிக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க கோரிக்கை! நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என அறிவிப்பு
மரவள்ளிக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க கோரிக்கை! நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என அறிவிப்பு
ADDED : ஜன 31, 2025 10:59 PM

கள்ளக்குறிச்சியில் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் பங்கேற்று கோரிக்கைகள் குறித்து பேசினர்.
அதில், செங்கனாங்கொல்லையில் புதிய துணை மின்நிலையம் அமைக்க வேண்டும், செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு பங்கு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மீன் வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டும், தேசிய நெடுஞ்சாலைகளை சீரமைக்கும் போது, அருகில் உள்ள வயல்வெளி சாலையை சேதப்படுத்த கூடாது.
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட உளுந்து பயிருக்கு நிவாரணம் வழங்க வேண்டும், மரவள்ளி பயிரின் கொள்முதல் விலை கனிசமாக குறைந்துள்ளதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
எனவே, மரவள்ளி பயிருக்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும்.
நோய்களால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு எந்த வகையான மருந்துகளை பரிந்துரை செய்ய வேண்டும் என்பது குறித்து தனியார் உரக்கடை உரிமையாளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். மேலும், அனைத்து கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டு கலப்படங்களை தவிர்க்க வேண்டும்.
இயற்கை விவசாயம் குறித்து கருத்தரங்கு நடத்த வேண்டும், சாக்கு கிடைக்காததால் அறுவடை செய்த நெல், உளுந்து பயிர்களை மார்க்கெட் கமிட்டிக்கு கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் பொதுப்பணித்துறை ஏரி வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், சாத்தனுார் வலதுபுற பிரதான கால்வாயில் இருந்து பிரியும் 4 கிளை கால்வாய்கள் மூலமாக 33 கிராமங்களை சேர்ந்த 21 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பயன்பெறுகிறது. இந்த கால்வாய்கள் துார்வாரப்படாததால் தண்ணீர் கடைமடை வரை செல்வதில்லை.
கிராமங்களை ஒட்டியுள்ளவாறு உள்ள வனப்பகுதியில் யூகலிப்ட்ஸ் மரங்கள் வளர்ப்பதை தவிர்த்து, காப்பு காடுகள் அமைக்க வேண்டும்.
வனப்பகுதியில் குட்டை வெட்டி வனவிலங்குகளின் நீர்தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.
கோடைகாலம் துவங்க உள்ள நிலையில், பழுதடைந்த மின்ஒயர்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்களை கண்காணித்து மாற்ற வேண்டும், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படுவதில்லை, வரஞ்சரம் கோமுகி ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினர்.
தொடர்ந்து, விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் சத்தியமூர்த்தி கூறியதாவது:
மாவட்டத்தில் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடங்களில் தாசில்தார் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் நேரடி ஆய்வு செய்துள்ளனர்.
விரைவில், நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும். உளுந்து விதைகள் கையிருப்பு உள்ளதால் தேவைப்படும் விவசாயிகள் வாங்கிக்கொள்ளலாம்.
கூட்டத்தில், டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், வேளாண்மை இணை இயக்குநர் சத்தியமூர்த்தி, தோட்டக்கலை இணை இயக்குநர் சிவக்குமார், கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் கண்ணன், வேளாண்மை துணை இயக்குநர் அன்பழகன், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் (பொ) மயில்வாகணன், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் நந்தகுமார் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.