/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏரிகளின் நீர் வரத்து கால்வாய்களை சீரமைக்க கோரிக்கை: பருவ மழைக்கு முன்பாக பணிகள் துவங்குமா?
/
ஏரிகளின் நீர் வரத்து கால்வாய்களை சீரமைக்க கோரிக்கை: பருவ மழைக்கு முன்பாக பணிகள் துவங்குமா?
ஏரிகளின் நீர் வரத்து கால்வாய்களை சீரமைக்க கோரிக்கை: பருவ மழைக்கு முன்பாக பணிகள் துவங்குமா?
ஏரிகளின் நீர் வரத்து கால்வாய்களை சீரமைக்க கோரிக்கை: பருவ மழைக்கு முன்பாக பணிகள் துவங்குமா?
ADDED : ஆக 17, 2024 03:27 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, பஞ்சாயத்திற்குப்பட்ட ஏரிகளின்நீர் வரத்து கால்வாய்களை பருவ மழைக்கு முன்பாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளகலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் முக்கிய பிரதான தொழிலாக உள்ளது. மாவட்டத்தில் நெல், கரும்பு, மக்காசோளம், மஞ்சள், மரவள்ளி, பருத்தி அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் மணிலா, உளுந்து உள்ளிட்ட குறுகிய கால பயிர்களும் சாகுபடி செய்யப்படுகிறது.
மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் கோமுகி, மணிமுக்தா அணைகள், 335 ஏரிகள் மற்றும் கோமுகி, மணிமுக்தா, கெடிலம் ஆகிய மூன்று ஆறுகள் உள்ளன. 72 அணைகட்டுகள் உள்ளன.
இதில் கோமுகி, மணிமுக்தா அணைகள் விவசாயிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. அதேபோல் மாவட்டத்தில் பஞ்சாயத்திற்குபட்பட்டு 380 ஏரிகள் உள்ளது. இரு அணைகள் மற்றும் ஏரிகளின் பாசனத்தை நம்பி 50 ஆயிரம் ெஹக்டர் பரப்பளவிற்கு மேலான விவசாய நிலங்கள் உள்ளன.
வடக்கிழக்கு பருவ மழை காலங்களில் அணைகளில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தொடர் மழையின் போது அணைகள் நிரம்பியவுடன் பாதுகாப்பு கருதி ெஷட்டர்கள் திறந்து ஆறுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்படும்.
அத்தருணத்தில் ஆறுகளில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி வழிந்தோடும். ஆறுகளில் உள்ள தடுப்பணைகளிலிருந்து ஏரிகளுக்கு நீர் வரத்து ஏற்படும் கால்வாய்கள் உள்ளது. இதன் மூலம் பெரும்பாலன ஏரிகள் நிரம்பி வருகிறது.
இந்நிலையில், ஆறுகளின் தடுப்பணைகளிலிருந்து ஏரிகளுக்கு செல்லக்கூடிய பெரும்பாலான நீர் வரத்து கால்வாய்களில் தற்போது அதிகளவில் விழல், செடி கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சியளிக்கிறது. அதேபோல் பெரும்பாலான இடங்களில் கால்வாய் ஆக்கிரமிப்பிலும் சிக்கியுள்ளது. இதனால், பருவ மழையின் போது நீர் வரத்து கால்வாய் மூலம் பெரும்பாலான ஏரிகளுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் நிலவுகிறது.
கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் நடக்கும் விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் பஞ்சாயத்திற்குட்பட்ட ஏரிகளின் நீர் வரத்து கால்வாய், உபரி நீர் செல்லக்கூடிய கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் ஒவ்வொரு முறையும் கோரிக்கை விடுக்கின்றனர். அப்போது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் மூலம் விவசாயிகளுக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. ஆனால் அதன்பின் கண்டுகொள்வதில்லை.
தாங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தாலும் ஏரிகளின் ஆக்கிரமிப்பு அகற்றம் மற்றும் நீர் வரத்து கால்வாய்களை சீரமைப்பதில் அதிகாரிகள் மெத்தனபோக்கை கடைபிடிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இவை ஒவ்வொரு முறையும் விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் எதிரொலிக்கிறது.
இந்நிலையில் அவ்வப்போது மழை பெய்து வந்தாலும், ஓரிரு மாதங்களில் வடக்கிழக்கு பருவ மழை துவங்க உள்ளது.
எனவே, மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, ஊராட்சிக்குட்பட்ட அனைத்து ஏரிகளின் நீர் வரத்து கால்வாய்களிலும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கு கலெக்டர் பிரசாந்த் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.