
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கிராம, பகுதி, சமுதாய செவிலியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, செவிலியர் கூட்டமைப்பு மாவட்ட தலைவி சாந்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜோதி இருதயமேரி முன்னிலை வகித்தார்.மாநில செயலாளர்கள், பகுதி சுகாதார செவிலியர் சங்கம் சுசீலா, கிராம சுகாதார செவிலியர் சங்கம் சாந்தி, சமுதாய நலசெவிலியர் சங்கம் ஜெயந்தி கண்டன உரையாற்றினர்.
தமிழகத்தில் உள்ள 3,800 துணை சுகாதார நிலையங்களில் காலி பணியிடங்களை, கிராம சுகாதார செவிலியர்களை கொண்டு பணியமர்த்த வேண்டும். தற்காலிக பணியாளர்களை தடுப்பூசி போடுமாறு அறிவுறுத்தும் அரசாணை ரத்து செய்யவேண்டும். தடுப்பூசி, தடுப்பு மருந்துகள் வழங்கம் பணியை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும்.
கொரோனா தடுப்பூசி பணி செய்த கிராம, பகுதி, சமுதாய சுகாதார செவிலியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். புதியஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தியதுடன், இறுதியாக கலெக்டரிடம் மனு அளித்தனர். 200க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர்.