/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலூரில் வளர்ச்சி திட்டப் பணிகள்... கிடப்பில்; இப்பிரச்னைகள் தேர்தலின்போது எதிரொலிக்கும்
/
திருக்கோவிலூரில் வளர்ச்சி திட்டப் பணிகள்... கிடப்பில்; இப்பிரச்னைகள் தேர்தலின்போது எதிரொலிக்கும்
திருக்கோவிலூரில் வளர்ச்சி திட்டப் பணிகள்... கிடப்பில்; இப்பிரச்னைகள் தேர்தலின்போது எதிரொலிக்கும்
திருக்கோவிலூரில் வளர்ச்சி திட்டப் பணிகள்... கிடப்பில்; இப்பிரச்னைகள் தேர்தலின்போது எதிரொலிக்கும்
ADDED : மார் 14, 2024 05:06 AM
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் பகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது லோக்சபா தேர்தலின்போதுஎதிரொலிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் பிரிக்கும் போது திட்டமிட்டே திருக்கோவிலுாரை, கள்ளக்குறிச்சியுடன் இணைத்தனர். இதனால் இப்பகுதியின் வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்பட்டது.
தி.மு.க., அரசு பொறுப்பேற்று அமைச்சர் அந்தஸ்தை பெற்றால், திருக்கோவிலுாரின் வளர்ச்சி விழுப்புரத்திற்கு இணையாக இருக்கும் என்ற வாக்குறுதியை வழங்கியதால் முன்னாள் அமைச்சர் பொன்முடி, தேர்தலில் அபரிமிதமான வெற்றி பெற்றார்.
அதற்கேற்ப திருக்கோவிலுார் அரசு மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி முதல் கட்ட பணியை துவக்கி ரூ.60 கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருகிறது. அரசு கலைக் கல்லுாரி துவங்கப்பட்டு, அதற்கான கட்டுமான பணிகள் தற்பொழுது நடக்கிறது. திருக்கோவிலுார் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு ரூ.3.50 கோடி மதிப்பில் புதிய நகராட்சி அலுவலகம், ரூ.3.50 கோடியில் அறிவு சார் மையம், மேம்படுத்தப்பட்ட மின்தகன மேடை என வளர்ச்சி பணி திட்டங்கள் வேகம் எடுத்தது.
இருப்பினும் மக்களின் பெரும் எதிர்பார்ப்பான திருக்கோவிலுாரை, விழுப்புரம் மாவட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இச்சூழலில் சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடி பதவியை இழந்ததால் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டிருப்பது திருக்கோவிலுார் மட்டுமல்லாது தொகுதி மக்களுக்கே பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
திருக்கோவிலுார் தரைபாலத்தை உயர்மட்ட பாலமாக கட்டுவதற்கு, அப்போதைய அ.தி.மு.க., அரசு நடவடிக்கை மேற்கொண்டது. தொடர்ந்து தி.மு.க., அரசு பொறுப்பேற்ற நிலையில், தற்போது மூன்றாண்டுகளாகியும் அதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
போக்குவரத்து மிகுந்த, வளைந்து நெளிந்து, மேடு பள்ளத்துடன் உள்ள திருக்கோவிலுார்- விழுப்புரம் சாலையை, நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. கண்துடைப்பாக ஆங்காங்கே சில இடங்களில் ஒன்று இரண்டு மீட்டர் சாலை அகலப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அதேபோல் தென்பெண்ணை ஆற்றில் நடந்த மணல் கொள்ளை காரணமாக திருக்கோவிலுார் அணைக்கட்டின் கீழ் பகுதி இரண்டு மீட்டர் ஆழத்திற்கு பள்ளமாகிவிட்டது. வெள்ளம் ஏற்பட்டால் அணைக்கட்டு உடையும் அபாய சூழல் உருவாகியுள்ளது. இதனை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை மாநில உயர் அதிகாரிகள் ரூ. 50 கோடி மதிப்பில் திருக்கோவிலுார் அணைக்கட்டை மேம்படுத்தி பலப்படுத்துவதுடன், அணைக்கட்டில் இருந்து பிரியும் பம்பை வாய்க்கால், மலட்டாறு, ராகவன் வாய்க்கால், மருதூர் வாய்க்கால், சித்தலிங்கமடம் வாய்க்கால் என ஐந்து கால்வாய்களையும் துார்வாரி பலப்படுத்த வேண்டும் என்ற திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 20,000 ஹெக்டர் நிலங்கள் முழுமையான பாசன வசதி பெறுவதும் தடை பட்டிருக்கிறது. எல்லீஸ், தளவானுார் அணைக்கட்டுகள் உடைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருப்பதை உணர்ந்து, திருக்கோவிலுார் அணைக்கட்டு பாதிப்பு ஏற்படுவதற்கு முன், அரசு உடனடியாக நிதி ஒதுக்கி பணிகளை துவங்க வேண்டும்.
பொன்முடி தற்பொழுது பிரதிநிதித்துவம் இல்லாமல் இருப்பதும் தொகுதியின் வளர்ச்சிக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது. இப்பிரச்னைகள் வரும் லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

