ரூ.130 கோடியில் அணைக்கட்டு புனரமைப்பு பணி துரிதம்: திருக்கோவிலுார் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி
ரூ.130 கோடியில் அணைக்கட்டு புனரமைப்பு பணி துரிதம்: திருக்கோவிலுார் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி
UPDATED : ஆக 24, 2026 04:41 PM
ADDED : ஆக 24, 2026 04:22 PM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அணைக்கட்டு 130 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கும் பணி 85 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், பணியை விரைந்து முடித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துரிதமாக நடந்து வருகிறது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே சாத்தனுார் அணைக்கு அடுத்தபடியாக திருக்கோவிலுார் அணைக்கட்டுதான் மிகப்பெரிய தடுப்பணையாக உள்ளது. இங்கு நீரை தேக்க முடியாது, என்றாலும், தடுத்து திருப்பி விடப்படும் தண்ணீர் பம்பை வாய்க்கால், மலட்டாறு, ராகவன் வாய்க்கால், சித்தலிங்கமடம் வாய்க்கால்களில் செல்லும்.
ரூ.55 ஆயிரத்தில் அணைக்கட்டு கடந்த 1861ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 61 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஆய்வு மாளிகையடன் கூடிய அணைக்கட்டிற்கு திட்டப் பணிகள் தயாரிக்கப்பட்டு, ஓராண்டு காலத்தில் 55 ஆயிரம் ரூபாய் மதிப்பிலேயே கட்டி முடிக்கப்பட்டது. திட்ட மதிப்பீட்டைக் காட்டிலும் 6,000 ரூபாய் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு பல்வேறு காலகட்டங்களில் அணை விரிவுபடுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டது.
2 முறை சேதமானது கடந்த 1972ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில், 2 லட்சம் கனஅடியையும் தாண்டி தண்ணீர் சென்றது. இதனால் அணை சற்று பலவீனமடைந்த நிலையில் புனரமைக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த பெஞ்சல் புயல் வெள்ளத்தில் 3 லட்சம் கன அடி நீர் பெருக்கெடுத்தது. இதன் காரணமாக அணைக்கட்டின் இடது புறக்கரை உடைந்து, பெருத்த சேதம் ஏற்பட்டது.
இதனால், பம்பை வாய்க்கால் மூலம் புதுச்சேரி, வாதானுார் ஏரி வரையிலும், மலட்டாற்றின் மூலம் எலந்தம்பட்டு வரையிலும், ராகவன் வாய்க்கால் வழியாக திருநாவலுார் வரையிலும் தண்ணீர் சென்று 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கான தண்ணீர் விநியோகம் பாதித்தது.
இரவு, பகலாக புனரமைப்பு பணி முக்கியத்துவம் வாய்ந்த இந்த அணைக்கட்டை புதுப்பிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனையத்து கடந்த ஆட்சியில் நீர்வளத்துறை நிபுணர் குழுவைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் அணைக்கட்டை 152 மீட்டர் விரிவுபடுத்தி, பழைய அணைக்கட்டான 457 மீட்டர் துாரத்தை புதுப்பித்து, மொத்தம் 609 மீட்டர் நீளம் சீரமைக்கப்பட்டு வருகிறது.
கடந்த அக்டோபர் மாதம் 14ம் தேதி கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்ட நிலையில், அணை விரிவுபடுத்தும் பகுதிகளில் ராட்சச மோட்டார்கள் மூலம் தண்ணீர் இறைக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் இரவு, பகலாக நடந்து வருகிறது. அதே போல் தடுப்புச் சுவர் அமைக்கும் பணியும் நவீன இயந்திரங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
வெள்ள காலங்களில் அணையை ஒட்டிய பகுதியில் இடதுபுற சாலையோரம் அரிப்பு ஏற்படாமல் இருக்க பல மீட்டர் துாரத்திற்கு தடுப்புச் சுவர் அமைத்து, வாய்க்கால்களுக்கு தண்ணீர் செல்லும் மதகுகள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
முழுமையாக சேதம் அடைந்த பம்பை வாய்க்கால், ஏமப்பேர் வாய்க்கால் கட்டும் பணி நிறைவடைந்திருப்பதுடன், மதகுகளில் இருந்து சில மீட்டர் துாரத்திற்கு கால்வாய்கள் புதுப்பிக்கும் பணிகளும் நடந்து வருகிறது.
85 சதவீதம் நிறைவு ஏற்கனவே வலது புறத்தில் 4, இடது புறத்தில் 4 என எட்டு மணல் போக்கிகள் இருந்தது. தற்போது இடது புறத்தில் கூடுதலாக 2 மணல் போக்கிகள் கட்டப்பட்டு, மொத்தம் 10 மணல் போக்கிகளுடன் அணை ஸ்திரத்தன்மையுடன் எத்தனை லட்சம் கன அடி தண்ணீர் வந்தாலும் பாதிப்பு ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
நீர்வளத்துறை பொறியாளர்களின் நேரடி பார்வையில் பணியை உறுதியாகவும், விரைவாகவும் நடத்தி முடிக்கும் வகையில், மாநில அளவிலான உயர் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
பொறியியல் நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணியை நிறைவு செய்ய 2 ஆண்டு காலம் ஒப்பந்தம் என்றாலும், விவசாயிகளின் நலன் கருதி ஓராண்டிற்குள்ளாகவே 85 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது.
இது விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்ட விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியான செய்தியாகும். அத்துடன் இப்பகுதியில் இயங்கும் செஞ்சி கண்டாச்சிபுரம் உள்ளிட்ட கூட்டுக் குடிநீர் திட்டங்களும் நிலத்தடி நீர்மட்டம் மேம்பட்டு வறட்சி காலத்திலும் தடையற்ற குடிநீர் வழங்க வழி ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் வடகிழக்கு பருவ மழை காலத்திற்குள்ளாக பணியை நிறைவு செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நீர்வளத்துறை அதிகாரிகள் பணியை துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.
