/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கூத்தாண்டவர் கோவில் திருவிழா பக்தர்கள் கடும் அவதி
/
கூத்தாண்டவர் கோவில் திருவிழா பக்தர்கள் கடும் அவதி
ADDED : மே 01, 2025 06:15 AM

உளுந்துார்பேட்டை : கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் அடிப்படை வசதிகள் முறையாக ஏற்படுத்தப்படாததால்,பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கூவாகம், கூத்தாண்டவர் கோவில் வரலாற்று சிறப்பு மிக்கது. இங்கு ஆண்டுதோறும் நடக்கும் சித்திரை திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொள்வது வழக்கம்.
இந்நிலையில் இந்தாண்டிற்கான விழா, நேற்று முன்தினம், சாகை வார்த்தலுடன் துவங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் வழிபாடுகள் நடந்து வருகின்றன.
இதையொட்டி, கோவிலுக்கு கொளுத்தும் வெயிலில் வரும் பக்தர்களுக்கு, தாகம் தீர்க்க குடிநீர் வசதி ஏற்படுத்தப்படவில்லை.
கழிவறை, மின்விளக்கு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் அங்கு செய்து தரப்படவில்லை. ஆங்காங்கே பந்தல்களும் அமைக்கப்படவில்லை.
வெளிநாடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வரும் திருநங்கைகள் உள்ளிட்டோர் தங்க உரிய வசதிகளும் கிடையாது. இது கோவிலுக்கு வரும் திருநங்கைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பக்தர்கள் கூறியதாவது:
திருவிழாவின் போது உண்டியல் காணிக்கைகளை எடுத்துச் செல்லும் அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலுக்கு வண்ணங்கள் பூசி புதுப்பிக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இதுவரை மேற்கொள்ளவில்லை. அதனால் திருவிழா அமைதியாகவும், சிறப்பாக நடப்பதற்குரிய அடிப்படை வசதி, போதிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.