/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி தொகுதியில் தி.மு.க.,-அ.தி.மு.க., நேரடி மோதல்! பா.ஜ., கூட்டணியில் வேட்பாளர் யார் என எதிர்பார்ப்பு
/
கள்ளக்குறிச்சி தொகுதியில் தி.மு.க.,-அ.தி.மு.க., நேரடி மோதல்! பா.ஜ., கூட்டணியில் வேட்பாளர் யார் என எதிர்பார்ப்பு
கள்ளக்குறிச்சி தொகுதியில் தி.மு.க.,-அ.தி.மு.க., நேரடி மோதல்! பா.ஜ., கூட்டணியில் வேட்பாளர் யார் என எதிர்பார்ப்பு
கள்ளக்குறிச்சி தொகுதியில் தி.மு.க.,-அ.தி.மு.க., நேரடி மோதல்! பா.ஜ., கூட்டணியில் வேட்பாளர் யார் என எதிர்பார்ப்பு
ADDED : மார் 21, 2024 11:32 AM

கள்ளக்குறிச்சியில் உற்சாகத்தில் அ.தி.மு.க.,வும், விறுவிறுப்புடன் தி.மு.க.,வும் களமிறங்கியுள்ளது.
திருக்கோவிலுார் : தமிழகத்தில் பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., கூட்டணி, தொகுதி உடன்பாடுகள் நிறைவடைந்து, வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு விட்டனர். அந்த வகையில் கள்ளக்குறிச்சி தொகுதியில் தி.மு.க., சார்பில் மலையரசனும், அ.தி.மு.க., சார்பில் மாவட்ட செயலாளர் குமரகுருவும் களம் காண்கின்றனர். மூன்றாவது அணியாக இருக்கும் பா.ஜ., கூட்டணியில் கள்ளக்குறிச்சி யாருக்கு ஒதுக்கப்படும்? யார் வேட்பாளர்? என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருக்க, தி.மு.க., அ.தி.மு.க., இடையே ஏற்பட்டிருக்கும் நேரடி போட்டியில் சாதக, பாதகம் குறித்த விவாதம் டீக்கடையில் துவங்கி, ஏசி ரூம் அரசியல் வரை விவாதிக்கப்பட்டு வருகிறது.
அ.தி.மு.க., வேட்பாளர் மாவட்ட செயலாளர் குமரகுரு என்பதால், கட்சியினர் அனைவருக்கும் நன்கு பரிச்சயமானவர். இதன் காரணமாக கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், சங்கராபுரம் உள்ளிட்ட தொகுதிகளில் கிராம கிளைக் கழக செயலாளர் வரை இவருக்கு நன்கு அறிமுகம்.
பிரதான கூட்டணியாக இருக்கும் தே.மு.தி.க., விற்கு இப்பகுதியில் மிகப்பெரும் செல்வாக்கு உண்டு. இதனை யாராலும் மறுக்க முடியாது. காங்., கட்சியில் ரிஷிவந்தியம் தொகுதியில் அசைக்க முடியாத ஜாம்பவானாக இருந்த மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ., சிவராஜ்யை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் மறைந்த விஜயகாந்த் வெற்றி கொண்டார்.
அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த தே.மு.தி.க., யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக இருந்த நிலையில், ரிஷிவந்தியம் தொகுதியில் பெரும்பாலான சுவர்களில் முரசு சின்னத்தை வரைந்து யாருடன் கூட்டணி அமைத்தாலும் கள்ளக்குறிச்சி தே.மு.தி.க., விற்குத்தான் என்று உறுதிப்பட கூறி வந்த உற்சாகம் குறையாதவர்கள், மனக்கசப்பு இல்லாமல் அ.தி.மு.க., வுடன் ஏற்பட்ட கூட்டணியை ஏற்றுக் கொண்டு கட்சித் தலைமையின் முடிவை நிறைவேற்றும் உறுதியுடன் களமிறங்கி இருப்பது அ.தி.மு.க., விற்கு பலம் சேர்ப்பதாக இருக்கும்.
சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஏற்காடு, ஆத்துார், கெங்கவல்லி உள்ளிட்ட தொகுதிகள் அ.தி.மு.க., வசம் இருப்பதால் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி சொந்தத் தொகுதி என்பதால் கவுரப் பிரச்னையாக எடுத்துக் கொண்டு களம் காண்பார் என்கின்றனர் இப்பகுதி அ.தி.மு.க., வினர்.
தி.மு.க., வில் மலையரசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் அவர் யார் என்ற ஆராய்ச்சியில் பல தி.மு.க., வினர் இறங்கத் துவங்கியுள்ளனர். அந்த அளவிற்கு கட்சியினர் மத்தியிலேயே அதிகம் பரீட்சையும் இல்லாதவர். பெரிய அளவில் பா விட்டமின் இல்லாத சூழலில் தி.மு.க., வேட்பாளர் பட்டியலில் இடம்பெறச் செய்து, வெற்றியும் பெற வைத்து, கட்சி தலைமைக்கு அழைத்து வருவோம் என்ற வாக்குறுதியுடன் பக்கபலமாக இருக்கும் அமைச்சர் எ.வ.வேலு, எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் ஆகியோரின் பெரும் செல்வாக்கு இவருக்கு உண்டு.
எனவே தேர்தல் வியூகங்களை வகுப்பதில் வல்லவரான அமைச்சர் எ.வ. வேலு இவரது வெற்றிக்கு முழுமையாக களம் இறங்குவார். வெற்றி பெற்றால் தனது ஆதரவாளராகவும் இருப்பார் என்ற தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் இவருக்கு சீட்டு வாங்கி கொடுத்திருப்பதால் வெற்றி பெறச் செய்வது உறுதி என சொந்த கட்சியின் உறுதியாக கூறுகின்றனர். தி.மு.க., அரசின் நலத்திட்ட உதவிகள் மக்களிடம் சென்று சேர்ந்து இருப்பதால் பெரும் பயனை அளிக்கும் என்ற நம்பிக்கையும் இவர்களுக்கு உள்ளது.
அதே வேலையில் ஊராட்சித் தலைவர்களால் தீர்மானிக்கப்படும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிகளை தாங்கள் செய்ய முடியாமல் வளம் படைத்த அரசியல்வாதிகளே முன்னின்று செய்து வருவதால் புழுங்கிக் கொண்டிருக்கும் ஊராட்சி தலைவர்கள் அதிருப்பதியில் உள்ளனர்.
அதே வேளையில் பா.ஜ., கூட்டணியில் இத்தொகுதி எந்த கட்சிக்கு ஒதுக்கப்படும்? யார் வேட்பாளர் என்ற எதிர்பார்ப்பு இரண்டு கட்சிகள் மத்தியிலும் அதிகரித்துள்ளது. அதன்பிறகு மூன்றாவது அணியின் வேட்பாளர் அறிவிப்பு மற்றும் நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தலில் 2.52 சதவீதம் ஓட்டு வாங்கியுள்ளது. மூன்றாவது அணி மற்றும் நாம் தமிழர் கட்சி எந்த அளவிற்கு தி.மு.க., அ.தி.மு.க., விற்கு பலம் மற்றும் பலவீனத்தை அளிக்கும் என்பது போகபோகத்தான் தெரியவரும்.

