/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்டத்தில் கரும்பு விவசாயிகள் கலக்கம்: தண்ணீர் பற்றாக்குறையால் தவிப்பு
/
மாவட்டத்தில் கரும்பு விவசாயிகள் கலக்கம்: தண்ணீர் பற்றாக்குறையால் தவிப்பு
மாவட்டத்தில் கரும்பு விவசாயிகள் கலக்கம்: தண்ணீர் பற்றாக்குறையால் தவிப்பு
மாவட்டத்தில் கரும்பு விவசாயிகள் கலக்கம்: தண்ணீர் பற்றாக்குறையால் தவிப்பு
ADDED : பிப் 26, 2024 06:27 AM
தியாகதுருகம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாத நிலையில் கோடை காலத்தின் துவக்கத்திலேயே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் கரும்பு விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. அதிகபட்சமாக 16.75 சதவீதம் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.
மாவட்டத்தில் 2 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளும் ஒரு தனியார் சர்க்கரை ஆலையும் உள்ளன.
கடந்த 10 ஆண்டுகளில் கிராமப் புறங்களில் உள்ள வயல் வழிச்சாலைகள் செப்பனிடப்பட்டு புதிதாக போடப்பட்டுள்ளதால் அறுவடை செய்த கரும்புகளை எளிதில் ஆலைகளுக்கு கொண்டு செல்ல முடிகிறது.
ஆண்டு பயிரான கரும்பு பராமரிப்பது எளிது. ஒருமுறை சாகுபடி செய்தால் குறைந்தது 4 முறை மறு தாம்பு மூலம் அறுவடை செய்ய முடியும். ஆண்டுக்கு ஒரு முறை அறுவடை செய்த கரும்பு களை சர்க்கரை ஆலைகள் கொள்முதல் செய்து கொள்வதால் நிகர லாபம் ஈட்ட முடியும்.
தண்ணீர் பற்றாக்குறை இன்றி ஆண்டுதோறும் நீர் பாய்ச்சினால் கரும்பு சாகுபடி அதிக பலனை கொடுக்கும் பயிராக உள்ளது. மாவட்டத்தில் அணை, ஏரிகள் மட்டுமின்றி கிணற்று பாசனம் கைகொடுப்பதால் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதன் காரணமாக மாவட்டத்தில் 52 ஆயிரம் ஏக்கர் பரப்பில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பருவ மழை சீராக பெய்தால் நீர்நிலைகள் நிரம்பி கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதில்லை.
கடந்த 5 ஆண்டுகளாக பருவ மழை போதிய அளவு பெய்ததால் கரும்பு சாகுபடியில் விவசாயிகள் லாபம் ஈட்டி வந்தனர். இந்த ஆண்டு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாமல் ஏமாற்றியது.
இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள 60 சதவீதம் ஏரிகள் நிரம்ப வில்லை. தற்போது, கோடைகாலம் துவங்குவதற்கு முன்பே பகல் வேளையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கி விட்டது.
இரவு நேரத்தில் பனிப்பொழிவு குறைந்து வெப்பம் அதிகரித்துள்ளது. நீர் நிலைகளில் தண்ணீர் வேகமாக வற்றி வருவதால் கிணறுகளில் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது.
இதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் கரும்பு பயிருக்கு நீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். கோடை வறட்சியில் சாகுபடி செய்துள்ள கரும்பு பயிரை காப்பாற்ற முடியுமா என்ற கலக்கமும் ஏற்பட்டுள்ளது.

