தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ திருக்கோவிலுாரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு தேவை... ஆக்கிரமிப்பால் வளர்ச்சி பணிகள் பாதிப்பு

திருக்கோவிலுாரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு தேவை... ஆக்கிரமிப்பால் வளர்ச்சி பணிகள் பாதிப்பு

திருக்கோவிலுாரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு தேவை... ஆக்கிரமிப்பால் வளர்ச்சி பணிகள் பாதிப்பு


UPDATED : மே 18, 2026 05:30 AM

ADDED : மே 17, 2026 05:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 18, 2026 05:30 AM ADDED : மே 17, 2026 05:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரின் வளர்ச்சி பணி திட்டங்களுக்கு தடையாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தடையற்ற வளர்ச்சிப் பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள புதிய அரசும், தொகுதி எம்.எல்.ஏ.,வும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருக்கோவிலுார் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பெரு நகரம் என்றாலும், மக்களாட்சியில் அரசியல் காரணங்களுக்காக நகரம் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது. அரசியலுக்கு அப்பாற்பட்டு நகரின் வளர்ச்சிக்காக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வரும் நிலையில், தற்போது பெரும் பிரச்னையாக இருப்பது போக்குவரத்து நெரிசல்.

இதற்கு முக்கிய காரணம் ஆக்கிரமிப்புகள். குறிப்பாக சன்னதி வீதி, கிழக்கு வீதி, தெற்கு வீதி, வடக்கு வீதி, ஐந்து முனை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இப்பகுதிகளில் தற்காலிக ஆக்கிரமிப்பை காட்டிலும், நிரந்தர ஆக்கிரமிப்புகள் பல அடி துாரத்திற்கு சாலையை மரித்து இருப்பதால் அதனை இடித்து அகற்றுவதில் அதிகாரிகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அலட்சியம் காட்டி வருகின்றனர்.

ஐ.ஏ.எஸ்., அதிகாரி மட்டத்தில் சப் கலெக்டர் இருந்தாலும், ஆக்கிரமிப்பை அகற்ற அவ்வப்பொழுது அரசியல் கட்சிகள், வணிகர்கள் என அனைத்து தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பு அளந்து குறியீடு செய்தாலும் அகற்றுவதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் எடுப்பதில்லை.

இதன் பின்னணியில் அரசியல் இருப்பதாக அதிகாரிகள் கூறி தட்டி கழித்து வந்தனர். இதனால் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான தீர்வு கிடைக்காமல் மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

தற்பொழுது ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கும் நிலையில், பாரபட்சம் இன்றி இந்த அரசு செயல்படும் என்ற முதல்வர் விஜயின் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அதிகாரிகள் உறுதியான, நேர்மையான நடவடி எடுத்து ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதேபோல் புதிதாக தேர்வாகி இருக்கும் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பழனிச்சாமியும் நியாயமான மக்களின் பிரச்னைகளுக்கு துணை நிற்பார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஆக்கிரமிப்பு அகற்றம் வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலை துறையின் பணி மட்டுமே என எண்ணி காவல்துறை ஒதுங்கி விடாமல் தங்களுக்கு உள்ள பொறுப்பை உணர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இதன் மூலம் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிட்டும். உலகளந்த பெருமாள், வீரட்டானேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களும், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கிராம மக்களும், வாகன ஓட்டிகளும் நிம்மதி அடைவார்கள்.

ஆக்கிரமிப்பு அகற்றம் ஒரு புறம் இருந்தாலும், அறிவிக்கப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளான புதிய பஸ் நிலையம், வணிக வளாகம் அமைக்கும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு விரைவில் முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே ஒட்டுமொத்த திருக்கோவிலுார் தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. புதிய அரசும், புதிய எம்.எல்.ஏ., வும் இதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்களா? அதிகாரிகள் பொறுப்பை தட்டிக் கழிக்காமல் கடமையை நிறைவேற்றுவார்களா? என்பதை காலம் தான் பதில் சொல்லும் ,காத்திருப்போம்...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us