ADDED : பிப் 26, 2024 11:08 PM
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் ஆளுங்கட்சியின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரத்தை வீடு வீடாக கொடுத்து தி.மு.க., நிர்வாகிகள் தேர்தல் பிரசாரத்தை துவங்கி விட்டனர்.
லோக்சபா தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகத்தை வகுத்து அதனை செயல்படுத்த தயாராகி வருகின்றனர். இதில் ஆளுங்கட்சியான தி.மு.க., மற்ற கட்சிகளை விட வேகம் காட்டுகிறது.
ஓட்டுச்சாவடி வாரியாக பொறுப்பாளர்களை நியமனம் செய்து மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் தலைமையில் பிரசாரத்தை துவங்கியுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக 'இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் ஆளுங்கட்சியின் இரண்டரை ஆண்டு சாதனைகள் மற்றும் 2024ம் ஆண்டு பட்ஜெட்டின் சிறப்பம்சங்களை பட்டியலிட்டு கட்சி தலைமையில் இருந்து நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
அதனை கட்சிப் பொறுப்பாளர்கள் வீடு வீடாகச் சென்று கொடுத்து நோட்டீசில் உள்ள ஒவ்வொரு திட்டங்களையும் வாக்காளர்களிடம் விரிவாக எடுத்துக் கூறி ஆதரவு திரட்டி வருகின்றனர்.
அதேபோல் கட்சி உறுப்பினர்களின் வீடுகளின் முகப்பில் ஸ்டாலினின் போட்டோ பிரிண்ட் செய்த ஸ்டிக்கரை ஒட்டுகின்றனர்.
கட்சி தலைமையில் இருந்து பணம் தாராளமாக செலவு செய்வதால் தி.மு.க., நிர்வாகிகள் லோக்சபா தேர்தலை உற்சாகத்தோடு துவங்கியுள்ளனர்.
