ADDED : செப் 04, 2026 03:52 PM
சங்கராபுரம்: சங்கராபுரம் நகரில் வறட்சியை சமாளிக்க தமிழ்நாடு அரசு புதிதாக 2 கிணறுகளை அமைக்க 1.40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, கிணறு தோண்டும் பணி துவங்கியது.
சங்கராபுரம் பகுதியில் வறட்சி காரணமாக கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. வறட்சியை சமாளிக்க தமிழ்நாடு அரசு சங்கராபுரம் நகரில் மாநில பேரிடர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் 2 திறந்த வெளி கிணறுகள், நான்கு இடங்களில் ஆழ்துளை கிணறுகள், மற்றும் பேரூராட்சிக்கு சொந்தமான 5 கிணறுகளை துார்வாரும் பணிகளுக்கென 1.40 கோடி ரூபாய் தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது.
அதனைத் தொடர்ந்து, நேற்று சங்கராபுரம் தியாகராஜபுரம் சாலையில் புதிய கிணறுகள் அமைக்க பூமி பூஜை நடந்தது. பின் கிணறு தோண்டும் பணி துவங்கியது.
நிகழ்ச்சியில், பேருராட்சி சேர்மன் ரோஜாரமணி தாகப்பிள்ளை, பேருராட்சி செயல் அலுவலர் சங்கர் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
