/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சொட்டு நீர் பாசனம்: விவசாயிகள் ஆர்வம்
/
சொட்டு நீர் பாசனம்: விவசாயிகள் ஆர்வம்
ADDED : ஜூன் 25, 2025 08:17 AM

கள்ளக்குறிச்சி, : மாவட்டத்தில் சொட்டு நீர் பாசன முறையில் பயிர் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயம் முக்கிய பிரதான தொழிலாக உள்ளது. கோமுகி, மணிமுக்தா அணைகள், ஆறுகள் மற்றும் ஏரிகள் விவசாய பாசனத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது.
இப்பகுதியில் கரும்பு, நெல், மக்காச்சோளம், மரவள்ளி, மஞ்சள், உளுந்து, மணிலா உட்பட பல்வேறு வகையான பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பருவ மழையின் போது நிலத்தடி நீர் மட்டம் வலுத்து கிணற்று நீர் பாசனம் விவசாயிகளுக்கு கை கொடுக்கிறது.
வறட்சி காலங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறையும் போது, கிணறுகளில் தண்ணீர் மட்டமும் குறைகிறது. அத்தருணத்தில், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த விவசாய நிலங்களில் சொட்டு நீர் பாசனம் அமைத்து விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
மொத்தம், 4 ஏக்கர் பரப்பளவிலான சிறு, குறு விவசாயிகள் சொட்டு நீர் பாசன முறையில் பயிர் சாகுபடி செய்வதற்கு வேளாண்மை துறை சார்பில் தேவையான உபகரண பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.
அதற்கு மேற்பட்ட பரப்பளவில் உள்ள விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது.
இதனையொட்டி மாவட்டத்தில் கரும்பு, மஞ்சள், மரவள்ளி, மக்காச்சோளம், பருத்தி உட்பட பல்வேறு வகையான பயிர் சாகுபடியில் விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அமைத்து பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த முறையை பயன்படுத்தி பயிர் செய்வதன் மூலம் நீர் ஆவியாகுதல் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. வேர் பகுதியில் தண்ணீர் சொட்டுவதால் பயிர் ஆரோக்கியமாகவும், அதிகளவு விளைச்சலும் கிடைக்கும்.
மேலும் வறட்சி காலங்களில் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறையும் போது விவசாயிகள் பெரும்பாலானோர் சொட்டு நீர் பாசன முறையில் பயிர் சாகுபடி செய்வதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். சொட்டு நீர் பாசன முறையின் பயன்கள் தொடர்பாக வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை வழங்கி ஊக்குவிப்பு செய்ய வேண்டும்.