/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆற்றில் இறைச்சி கழிவுகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு! நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை தேவை
/
ஆற்றில் இறைச்சி கழிவுகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு! நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை தேவை
ஆற்றில் இறைச்சி கழிவுகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு! நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை தேவை
ஆற்றில் இறைச்சி கழிவுகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு! நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை தேவை
ADDED : மே 22, 2024 12:18 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கோமுகி ஆற்றில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இறைச்சி கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் ஆடு, கோழி, மீன் போன்ற இறைச்சிகள் விற்பனைக்கு என தனி மார்க்கெட் இல்லை. இதனால், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள முக்கிய சாலைகளின் ஓரங்களில் வரிசையாக தற்காலிக இறைச்சிக் கடைகள் அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். மந்தைவெளி அருகே தனியார் வாடகை கடைகள் மீன் மார்க்கெட்டாக இயங்கி வருகிறது.
இதில் இறைச்சி கழிவுகள் பெரும்பாலும் கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் சாலையில் உள்ள கோமுகி ஆற்றுப் பாலத்தின் கீழே இரவு நேரங்களில் மூட்டை, மூட்டையாக கொண்டு வந்து ரகசியமாக கொட்டி விட்டு செல்கின்றனர்.
இறைச்சி கழிவுகள் நாளடைவில் அழுகி, பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் அவ்வழியாக சென்று வரும் நிலையில், ஆற்றுப் பாலம் கீழே கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், ஆற்று பகுதியில் கொட்டப்பட்டுள்ள இறைச்சி கழிவுகளால் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஆற்றில் தண்ணீர் செல்லும் சூழ்நிலையில் இறைச்சி கழிவுகள் தண்ணீரில் அடித்து சென்று அருகே உள்ள கோட்டைமேடு தடுப்பணையில் தேங்கி நிற்கும் நிலை உள்ளது.
தடுப்பணையில் தேங்கும் தண்ணீரில் பொதுமக்கள் பலர் குளிப்பது, துணிகள் துவைப்பது போன்ற அத்யாவசிய தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர்.
அத்தருணத்தில் ஆற்றில் அடித்து சென்று தேங்கும் இறைச்சி கழிவுகளால் தொற்று நோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் ஆற்றில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.
எனவே, கோமுகி ஆற்றில் இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுப்பதற்கு பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வரும் காலங்களில் பெரும் பாதிப்பு ஏற்படும்.

