/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
காலியான 32 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல்... எப்போது?
/
காலியான 32 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல்... எப்போது?
காலியான 32 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல்... எப்போது?
காலியான 32 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல்... எப்போது?
ADDED : பிப் 03, 2025 03:57 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள நகராட்சி மற்றும் ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் கடந்த 2019ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட எல்லை வரையறை செய்யப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டது.
அதன்படி மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கல்வராயன்மலை, சங்கராபுரம், ரிஷிவந்தியம், தியாகதுருகம், திருக்கோவிலுார், திருநாவலுார், உளுந்துார்பேட்டை ஆகிய 9 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.
இங்கு 19 மாவட்ட கவுன்சிலர்கள், 180 ஒன்றிய கவுன்சிலர்கள், 412 ஊராட்சி தலைவர்கள் மற்றம் 3,162 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தமாக 3,773 ஊரக உள்ளாட்சி பதவியிடங்கள் இருந்தது. கடந்த 2021ம் ஆண்டு அக்., மாதம் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரு கட்டங்களாக நடத்தப்பட்டு, உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதேபோல், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பில், கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார் ஆகிய 3 நகராட்சிகளில் 72 கவுன்சிலர் பதவியிடங்களும், சின்னசேலம், தியாகதுருகம், மணலுார்பேட்டை, சங்கராபுரம், வடக்கனந்தல் ஆகிய 5 பேரூராட்சிகளில் 81 கவுன்சிலர் பதவியிடங்களும் இருந்தன.
மாவட்டத்தில் மொத்தமாக 153 நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் பதவியிடங்கள் இருந்தது. கடந்த 2022ம் ஆண்டு பிப்., மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு, நகர்ப்புற, பேரூராட்சி பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் சிலர் இறந்ததாலும், பதவியை ராஜினாமா செய்ததாலும் 9 பதவியிடங்கள் காலியாக இருந்தது.
மாநில தேர்தல் ஆணைய உத்தரவுப்படி காலியாக இருந்த 3 ஊராட்சி தலைவர்கள் மற்றும் 6 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி மறு தேர்தல் நடத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2026ம் ஆண்டு அக்., வரை உள்ளது.
இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு ஏப்., மாதத்திற்கு பிறகு உள்ளாட்சி பிரதிநிதிகள் இறந்ததால் 27 பதவியிடங்களும், ராஜினாமா செய்ததால் 5 பதவியிடங்களும் காலியாக உள்ளது. அதன்படி, மணலுார்பேட்டை 3 வது வார்டு உறுப்பினர் பதவியிடம் காலியானது. அதேபோல், ஊரக உள்ளாட்சி அமைப்பில் திருநாவலுார் ஒன்றியம் 10வது வார்டு, உளுந்துார்பேட்டை ஒன்றியம் 7 வது வார்டு என மொத்தமாக 2 ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்கள் காலியாக உள்ளது.
மேலும், ரிஷிவந்தியம் ஒன்றியம் எடுத்தனுார் மற்றும் கடம்பூர், திருநாவலுார் ஒன்றியம் ஒடப்பான்குப்பம், தியாகதுருகம் ஒன்றியம் சித்தலுார், திருக்கோவிலுார் ஒன்றியம் வடமலையனுார், உளுந்துார்பேட்டை ஒன்றியம் புல்லுார் ஆகிய 6 ஊராட்சி தலைவர்கள் பதவியிடம் காலியாக உள்ளது.
இந்த 6 ஊராட்சிகளில் துணைத்தலைவராக பதவி வகிப்பவர்களுக்கு கூடுதல் அங்கீகாரம் வழங்கப்பட்டு, தற்போது ஊராட்சி தலைவராக பொறுப்பு வகிக்கின்றனர்.
இது தவிர, மாவட்டத்தில் 23 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடமும் காலியாக உள்ளது. மாவட்டத்தில் காலியாக உள்ள 32 உள்ளாட்சி பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.