/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏரி நீரை வெளியேற்றும் ஆக்கிரமிப்பாளர்கள்; தண்ணீரை பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை
/
ஏரி நீரை வெளியேற்றும் ஆக்கிரமிப்பாளர்கள்; தண்ணீரை பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை
ஏரி நீரை வெளியேற்றும் ஆக்கிரமிப்பாளர்கள்; தண்ணீரை பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை
ஏரி நீரை வெளியேற்றும் ஆக்கிரமிப்பாளர்கள்; தண்ணீரை பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை
ADDED : டிச 08, 2025 04:46 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பருவமழையால் நிரம்பிய ஏரிகளில் ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் நீரை வெளியேற்றுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. டிட்வா புயல் காரணமாக மாவட்டத்திலுள்ள நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமாக 335 ஏரிகளும், கிராம ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் 305 ஏரிகளும் என மொத்தம் 640 ஏரிகள் உள்ளன. இதில் பெரும்பாலான ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதியை தனிநபர்கள் ஆக்கிரமித்து விளைநிலங்களாக மாற்றி உள்ளனர்.
ஊரை ஒட்டி உள்ள ஏரிகளில் சிலர் வீடுகளை கட்டியுள்ளனர். சமீபத்திய மழையால் மாவட்டத்தில் பல ஏரிகள் நிரம்பியுள்ளன. வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பு காரணமாக பல ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல முடியாமல் விரையம் ஆகி வருகிறது.
இதுபோன்ற இடங்களில் ஏரிகள் நிரம்ப முடியாமல் உள்ளது. ஏரிகள் நிரம்பியுள்ள இடங்களில் நீர் பிடிப்பு பகுதியை ஆக்கிரமித்து விவசாயம் செய்பவர்களின் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
இதன் காரணமாக பயிர் அழுகுவதை தடுக்க ஏரியில் தேங்கியுள்ள தண்ணீரை ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் முறைகேடாக வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பருவமழையால் கிடைத்த தண்ணீர் சிலரின் சுயநலத்தால் விரயமாகி வருகிறது. இதனை அதிகாரிகள் கண்காணித்து தண்ணீரை ஏரிகளில் இருந்து வெளியேற்றும் அத்துமீறலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் வரத்து வாய்க்கால்களை ஆக்கிரமித்து ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல விடாமல் தடுத்துள்ளவர்களிடம் இருந்தும் நீர் வழித்தடங்களை மீட்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

