/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பொறியாளரை தாக்கி நகை, மொபைல் பறிப்பு
/
பொறியாளரை தாக்கி நகை, மொபைல் பறிப்பு
ADDED : மார் 15, 2025 10:29 PM
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே நள்ளிரவில் தனியார் நிறுவன பொறியாளரை தாக்கி நகை, மொபைல், லேப்டாப், பணம் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பை சேர்ந்தவர் கருணாநிதி மகன் வினோத், 29; பொறியாளர். சென்னை, போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த, 12ம் தேதி நண்பரின் திருமணத்திற்கு கோயம்புத்துார் சென்றார்.
நேற்று முன்தினம் இரவு அங்கிருந்து சென்னைக்கு பைக்கில் புறப்பட்டார். நேற்று அதிகாலை, 1:30 மணியளவில் உளுந்துார்பேட்டை அடுத்த ஒலையனூர் தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது, இயற்கை உபாதைக்காக பைக்கை சாலையோரம் நிறுத்தினார்.
அப்போது அங்கு ஒரே பைக்கில் வந்த, 4 மர்ம நபர்கள், வினோத்தை மிரட்டி தாக்கினர். அவரிடம் இருந்த, ஒரு சவரன் செயின், லேப்டாப், ஐபோன், 2 ஆயிரம் ரூபாய், ஏ.டி.எம் கார்டு உள்ளிட்டவைகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
அதிர்ச்சி அடைந்த வினோத் அருகே உள்ள டீக்கடைக்குச் சென்று, அங்குள்ளவர்களிடம் மொபைல் வாங்கி, உளுந்துார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். வழிப்பறி ஆசாமிகள் குறித்து மேற்கொண்டு விசாரிக்கின்றனர்.