/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடினாலும் ஏரிகள் அவலம்! தடுப்பு சுவர் பழுதால் திருக்கோவிலுார் ஏரி வறண்டது
/
ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடினாலும் ஏரிகள் அவலம்! தடுப்பு சுவர் பழுதால் திருக்கோவிலுார் ஏரி வறண்டது
ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடினாலும் ஏரிகள் அவலம்! தடுப்பு சுவர் பழுதால் திருக்கோவிலுார் ஏரி வறண்டது
ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடினாலும் ஏரிகள் அவலம்! தடுப்பு சுவர் பழுதால் திருக்கோவிலுார் ஏரி வறண்டது
ADDED : அக் 13, 2025 12:17 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பெரிய ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால் தடுப்பு சுவர் சேதமடைந்ததால், ஆறு நிறைய தண்ணீர் சென்றாலும் திருக்கோவிலுார் உள்ளிட்ட 8 ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல முடியாமல் வற்றி கிடைக்கிறது. திருக்கோவிலுார் பெரிய ஏரி 95 ஏக்கர் பரப்பளவு கொண்டது. சுமார் 800 ஏக்கர் விவசாய நிலங்கள் இதன் மூலம் நேரடியாக பயன் பெறுகிறது. இத்துடன் கச்சிக்குச்சான், ஆவிகொளப்பாக்கம், காட்டுப்பையூர் உள்ளிட்ட 7 ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர் மூலம் 3000 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
தென்பெண்ணையில் சிறிதளவு தண்ணீர் வந்தால் கூட ஆற்று வாய்க்கால் வழியாக ஏரிக்கு தண்ணீர் வந்து, ஏரி எப்பொழுதும் நீர் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கும்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஏரிக்கான ஆற்று வாய்க்கால் முடியனுார் தென்பெண்ணை ஆற்றில் இருந்து துவங்கி 7 கி.மீ., பயணிக்கிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட பெஞ்சல் புயல் வெள்ளத்தில் ஆற்று வாய்க்காலின் தடுப்புச் சுவர் உடைந்து, மணல் நிரம்பி துார்ந்து போனது.
இதன் காரணமாக ஆற்றில் மாதக்கணக்கில் தண்ணீர் சென்றாலும் ஏரிக்கு தண்ணீர் வருவது சிரமம் என்ற நிலை ஏற்பட்டது.
விவசாயிகளும் ஏரி பாசன சங்க நிர்வாகிகளும் நீர்வளத்துறை அதிகாரிகளை அணுகி வாய்க்கால் தடுப்பு சுவரை சீரமைக்க கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வெள்ளத்தால் பாதிப்பை ஏற்பட்டபோது, நீர்வளத் துறை அதிகாரிகள் வாய்க்காலை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்யாதது தான் காரணம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் ஏரி பாசன விவசாயிகள் அவசர அவசியம் கருதி ஜே.சி.பி., மூலம் சமீபத்தில் வாய்க்காலில் குவிந்திருந்த மணல் அகற்றி, உடைந்த தடுப்புச் சுவருக்கு பதிலாக மணலால் கரை கட்டினர். ஆற்றில் சீரான அளவில் தண்ணி சென்ற போது ஏரிக்கு தண்ணீர் வந்தது.
இச்சூழலில் சாத்தனுார் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் மணலால் கட்டப்பட்ட தடுப்பு அடித்துச் செல்லப்பட்டது. இதனால் ஏரிக்கு தண்ணீர் செல்வது நின்று போனது. தற்பொழுது தென்பெண்ணையாற்றில் 9000 கன அடி தண்ணீர் சென்று கொண்டிருந்தாலும், திருக்கோவிலுார் ஏரிக்கு தண்ணீர் செல்லவில்லை என்பது தான் வேதனையாக உள்ளது.
15000 கன அடிக்கு மேல் தண்ணீர் சென்றாள் மட்டுமே திருக்கோவிலுார் ஏரி வாய்க்காலில் தண்ணீர் செல்லும் நிலை உள்ளது. இதனால் மழை நீரை நம்பியே ஏரி பாசன விவசாயிகள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. திருக்கோவிலுார் ஏரி பாசன விவசாயிகள் மட்டுமின்றி இதற்கு கீழ் இருக்கும் ஏழு ஏரி பாசன விவசாயிகளும் சம்பா சாகுபடிக்கான ஆயத்த பணியை துவக்க முடியாமல் காத்திருக்கின்றனர்.
'காற்றுள்ள போதே துாற்றிக் கொள்'என்பதுபோல், ஆற்றில் தண்ணீர் வரும்போது அதனை வாய்க்கால் வழியாக கொண்டு சென்று ஏரியை நிரப்பி விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும்.
பருவ மழை துவங்கும் முன்னதாக பாசன வாய்க்கால்களை பழுதுபார்க்க வேண்டும் என விவசாய சங்கங்கள் ஒவ்வொரு திங்கள் கிழமையும் நடக்கும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம், மாதாந்திர விவசாயிகள் குறை கேட்பு கூட்டத்தில் வலியுறுத்தி வந்தனர். ஆனால், மாவட்ட நிர்வாகம் 'செவிடன் காதில் ஊதிய சங்கு போல்' இருந்ததால், இன்று ஆறு நிறைய தண்ணீர் சென்றாலும், பாசன வாய்க்கல் தடுப்பு சுவர் பழுதால் ஏரிக்கு தண்ணீர் செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இனியாவது நீர்வளத்துறை அதிகாரிகள், ஆற்றில் மணல் மூட்டைகளை அடுக்கி தடுப்பை ஏற்படுத்தி ஏரி வாய்க்காலில் தண்ணீர் செல்ல வழிவகை ஏற்படுத்துவதன் மூலம் திருக்கோவிலுார் மட்டுமின்றி, இப்பகுதியில் இருக்கும் மேலும் 7 ஏரி விவசாயிகள் பயன்பெறுவர். இவ்விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என விவசாயிகள் காத்திருக்கின்றனர்.