/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்டத்தில் 3 நகராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம்: ஒரு பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்வு
/
மாவட்டத்தில் 3 நகராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம்: ஒரு பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்வு
மாவட்டத்தில் 3 நகராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம்: ஒரு பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்வு
மாவட்டத்தில் 3 நகராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம்: ஒரு பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்வு
ADDED : செப் 30, 2024 06:38 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 நகராட்சிகளில் அருகே உள்ள ஊராட்சிகளை இணைத்து நகராட்சியின் எல்லைகள் விரிவாக்கம் செய்தும், ஒரு பேரூராட்சி நகராட்சியாகவும் தரம் உயர்த்தி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி உதயமானது. மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார் ஆகிய 2 வருவாய் கோட்டங்கள், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை, சங்கராபுரம், சின்னசேலம், கல்வராயன்மலை, வாணாபுரம் ஆகிய 7 தாலுகாக்கள் உள்ளன.
மாவட்டம் பிரிக்கப்பட்ட போது 21 வார்டுகளுடன் கள்ளக்குறிச்சி நகராட்சி இருந்தது.
கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை பேரூராட்சிகள் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனையடுத்து மாவட்டத்தில் நகராட்சியின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. அதேபோல் சின்னசேலம், மணலுார்பேட்டை, தியாகதுருகம், வடக்கனந்தல், சங்கராபுரம் ஆகிய 5 பேரூராட்சிகள், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், ரிஷிவந்தியம், தியாகதுருகம், திருநாவலுார், உளுந்துார்பேட்டை, சங்கராபுரம், திருக்கோவிலுார், கல்வராயன்மலை ஆகிய 9 ஒன்றியங்கள், 412 ஊராட்சிகள் உள்ளன. உளுந்துார்பேட்டை நகராட்சியாக தரம் உயர்ந்த பின் 24 வார்டுகளாக பிரிக்கப்பட்டது. அதேபோல் 18 வார்டுகளுடன் இருந்த திருக்கோவிலுாரில், தரம் உயர்வுக்கு பின் 27 வார்டுகளாக மாற்றியமைக்கப்பட்டது.
தற்போது மாவட்டத்தில் உள்ள மூன்று நகராட்சிகளின் எல்லைகள் அருகே உள்ள ஊராட்சிகளை இணைத்து விரிவாக்கம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கள்ளக்குறிச்சி நகராட்சியில் தென்கீரனுார், நீலமங்கலம், க.மாமனந்தல், மாடூர், பெருவங்கூர், சிறுவங்கூர், வி.பாளையம், வீரசோழபுரம் ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது. அதேபோல் உளுந்துார்பேட்டை நகராட்சியில் அருகே உள்ள பாண்டூர், நகர் (எ) மன்னார்குடி, ஆர்.ஆர்.குப்பம், செங்குறிச்சி, காட்டுநெமிலி, எஸ்.எஸ் தக்கா (எ) மூலசமுத்திரம் முழுமையாக 6 ஊராட்சிகளும், ஏ.சாத்தனுார் ஊராட்சியில் (எடைக்கல், அஜிஸ்நகர், ஏ.சாத்தனுார், புதுஎடைக்கல்) எடைக்கல் கிராமம் மட்டும் இணைக்கப்பட்டுள்ளது. திருக்கோவிலுார் நகராட்சியில் டி.கீரனுார், தேவியகரம் ஆகிய ஊராட்சிகள் இணைத்து நகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
3 நகராட்சியுடன் தற்போது 16 ஊராட்சிகள் இணைக்கவுள்ள நிலையில், ஊராட்சிகளின் எண்ணிக்கை 396 ஆக குறைந்துள்ளது.
மாவட்டத்தில் ஒரு பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது எந்த பேரூராட்சி என அறிவிக்கப்படவில்லை. ஊராட்சிகள் இணைப்பு பட்டியலில் 5 பேரூராட்சிகளுக்கு அருகே உள்ள எந்த ஊராட்சிகளின் பெயரும் இடம் பெறவில்லை.
தற்போதைய நிலையில் சின்னசேலம் பேரூராட்சியில் மட்டுமே கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பார்க்கும்போது அதனை நகராட்சியாக தரம் உயர்த்த அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

