திருக்கோவிலுாரில் வளர்ச்சி திட்டங்கள் தொடர. எதிர்பார்ப்பு .. அரசு மருத்துவமனை பணியை முடிக்க கோரிக்கை
திருக்கோவிலுாரில் வளர்ச்சி திட்டங்கள் தொடர. எதிர்பார்ப்பு .. அரசு மருத்துவமனை பணியை முடிக்க கோரிக்கை
ADDED : மே 27, 2026 03:42 AM

திருக்கோவிலுார் ஒருங்கிணைந்த தென்னார்க்காடு மாவட்ட தலைநகரான கடலுாருக்கு அடுத்த தலைமை இடமாக இருந்தது. ஆனால் இன்று குக்கிராமங்களாக இருந்த பகுதிகள் கூட இன்று பெரிய நகரங்களாகி விட்ட நிலையில், திருக்கோவிலுார் அதன் வளர்ச்சியில் பல ஆண்டுகள் பின்தங்கி சென்று விட்டது. இதற்கு அடிப்படை காரணம் அரசியல்.
தட்டுத்தடுமாறி தற்போது தான் அரசு கலைக் கல்லுாரி ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டுமான பணி பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியம், ஊழல் காரணமாக பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு முறையான மருத்துவ வசதி கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். தினசரி ஆயிரக்கணக்கான நோயாளிகள் நீண்ட வரிசையில் டோக்கன் வாங்குவதற்கும், டாக்டர்களை சந்திப்பதற்கும் இட நெருக்கடியில் காத்து கிடக்கும் அவலம் தொடர்கிறது.
விபத்து, தற்கொலை உள்ளிட்ட காரணங்களால் நிகழும் இறப்பில் போலீசார் வழக்கு பதிந்து உடற்கூறாய்வு செய்வதற்கு உடலை முண்டியம்பாக்கம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு அனுப்பி வைக்கும் அவலம் தொடர்ந்து நீடிக்கிறது. இதனால் உறவுகளை இழந்து மிகவும் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் உறவினர்கள், உடலை வாங்க நீண்ட துாரத்திற்கு அலையும் மோசமான நிலைமை திருக்கோவிலுாரில் உள்ளது.
புதிதாக பொறுப்பேற்று இருக்கும் த.வெ.க., அரசு மாற்றத்திற்கான ஆட்சியாக மக்கள் எதிர்பார்க்கும் நிலையில், பணியை தாமதப்படுத்தும் அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் வளர்ச்சி திட்ட பணிகளை நிறைவு செய்து போதுமான பணியாளர்களை நியமித்து, மருத்துவமனையை உடனடியாக திறக்க வேண்டும். இதன் மூலம் திருக்கோவிலுார் மட்டுமின்றி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த நோயாளிகள் பயனடைவர்.
பயணிகள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பஸ் நிலையம் ஏற்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோளை கடந்த தி.மு.க., அரசு கடைசி கட்டத்தில் நிறைவேற்றும் வகையில் இடத்தை தேர்வு செய்து, நில எடுப்பு, நிலப்பரிவர்த்தனை உள்ளிட்ட பணிகளை நிறைவு செய்து அதற்கான டெண்டர்கள் கோரி பணியை துவங்க வேண்டிய கட்டத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது.
அதேபோல் திருக்கோவிலுார் போலீஸ் ஸ்டேஷன் பக்கத்தில் பாழடைந்த காந்தி திருமண மண்டபத்தை அகற்றிவிட்டு வணிக வளாகம் கட்ட டெண்டர் கோரப்பட்டது. இந்த பணியும் கிடப்பில் உள்ளது. இதனை துவங்கி நிறைவு செய்வதன் மூலம் தற்போது நடைபெற்று வரும் ஆக்கிரமிப்பு அகற்றாததால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு வணிக வளாகத்தில் கடைகளை ஒதுக்கி கொடுக்க முடியும். இவை இரண்டினையும் இந்த அரசு உடனடியாக துவக்கி, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
இது, திருக்கோவிலுார் மற்றும் சுற்று வட்டார கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
