திருக்கோவிலுார் தொகுதி முழுதும் விழுப்புரம் மாவட்டத்தில் இணைக்க... எதிர்பார்ப்பு:புதிய ஆட்சியில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் காத்திருப்பு
திருக்கோவிலுார் தொகுதி முழுதும் விழுப்புரம் மாவட்டத்தில் இணைக்க... எதிர்பார்ப்பு:புதிய ஆட்சியில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் காத்திருப்பு
UPDATED : ஜூன் 02, 2026 05:36 PM
ADDED : ஜூன் 02, 2026 05:32 PM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் தொகுதிக்கு உட்பட்ட திருக்கோவிலுார் மற்றும் 20 ஊராட்சிகளை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என்ற தொகுதி மக்களின் கோரிக்கை த.வெ.க., அரசு நிறைவேற்றுமா என்ற எதிர்பார்ப்பில் தொகுதி மக்கள் காத்திருக்கின்றனர். விழுப்புரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்ட பொழுது, திருக்கோவிலுார் தொகுதிக்கு உட்பட்ட திருக்கோவிலுார் நகராட்சி மற்றும் 20 ஊராட்சிகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும், எஞ்சிய 75 சதவீதம் பகுதிகள் விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.
அரசியல் காரணங்களுக்காக அப்போதைய அ.தி.மு.க., அரசு இதுபோன்ற ஒரு சிக்கலை உருவாக்கியது. ஆனால் இதுவே தொகுதி மக்களுக்கு பெரும் பாதிப்பாக அமைந்து விட்டது. மாவட்டத்தை பிரித்த அ.தி.மு.க., வும், கடந்த 5 ஆண்டுகள் ஆட்சி செய்த தி.மு.க.,வும் இதனை சரிசெய்யவில்லை.
இதன் காரணமாக, திருக்கோவிலுாரில் இருந்து 1 கி.மீ., துாரத்தில் உள்ள மணம்பூண்டி உள்ளிட்ட விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அருகில் இருக்கும் திருக்கோவிலுார் அரசு அலுவலகங்களான ஆர்.டி.ஓ., அலுவலகம், தீயணைப்பு நிலையம், மின்துறை அலுவலகம், நெடுஞ்சாலை துறை அலுவலகம், மருத்துவம், நீதிமன்ற பணிகளுக்கு செல்ல முடியாமல், 40 கி.மீ., தூரத்தில் இருக்கும் விழுப்புரத்துக்கு செல்ல வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் திருக்கோவிலுார் உள்ளிட்ட 20 ஊராட்சிகளை சேர்ந்தவர்கள் அரசின் வளர்ச்சி பணி திட்டங்கள் முழுமையாக கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் ஒரு தொகுதி இரண்டு மாவட்டம் என்ற சிக்கலில் சிக்கித் தவிக்கிறது. இது பொதுமக்களுக்கு மட்டும் சிரமத்தை ஏற்படுத்தவில்லை அரசு அதிகாரிகளுக்கும் பெரும் சங்கடத்தை உருவாக்கி இருக்கிறது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேர்தல் பணிகளை 20 ஊராட்சிகளையும் உள்ளடக்கி விழுப்புரம் கலெக்டர் கவனித்த நிலையில், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டரை அணுக வேண்டியுள்ளது. இதனால் திருக்கோவிலுார் உள்ளிட்ட பல பகுதிகள் விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கிறதா? அல்லது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இடம்பெறுகிறதா? என்ற சந்தேகம் சாதாரண மக்களுக்கு மட்டுமல்ல நன்கு படித்த பட்டதாரிகளுக்கும் ஏற்பட்டு இருக்கிறது.
இந்த சிக்கலை தீர்க்க திருக்கோவிலுாரை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்களும், பாதிக்கப்பட்டு இருக்கும் 20 ஊராட்சிகளை சேர்ந்தவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பல ஊராட்சிகளில் விழுப்புரத்துடன் இணைக்க வலியுறுத்தி கிராம சபை கூட்டத்தில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பொதுமக்களின் முக்கியமான இந்த கோரிக்கையை உணர்ந்த அரசியல் கட்சிகள் குறிப்பாக மாவட்ட பிரிப்பிற்கு காரணமாக இருந்த அ.தி.மு.க., வும், கடந்த 5 ஆண்டுகளாக மக்களின் கோரிக்கையை கிடப்பில் போட்ட தி.மு.க., வும் இன்னும் பிற கட்சிகளும் திருக்கோவிலுார் மற்றும் 20 ஊராட்சிகளை விழுப்புரம் மாவட்டத்தில் சேர்க்கிறோம் என்ற வாக்குறுதி அளித்தனர்.
கடந்த தி.மு.க., அரசு ஆட்சியின் கடைசி கட்டத்தில் இதற்கான முயற்சியை மேற்கொண்ட நிலையில், காலம் கடந்து விட்டதால் மக்களின் கோரிக்கை நிறைவேறாமல் ஆட்சி நிறைவடைந்தது.
மாவட்ட மறுவரை கோப்புகள் அரசின் பார்வையில் இருக்கும் நிலையில், நல்லதே நடக்கும் என்ற வாக்குறுதியுடன் பொறுப்பேற்று இருக்கும் த.வெ.க., அரசு நிலுவையில் இருக்கும் திருக்கோவிலுார் மக்கள் கோரிக்கையை ஒரு சில நாட்களில் நடைபெற உள்ள புதிய அரசின் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றி தரும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது.
எனவே நம்பிக்கையுடன் காத்திருக்கும் தொகுதி மக்களின் எதிர்பார்ப்பை மாவட்ட உயர் அதிகாரிகள் அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று மக்கள் பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டியது அவசர அவசியமாக உள்ளது.
