/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அதிகாரிகளின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு; 'பெஞ்சல்' நிவாரணத் தொகையை விரைந்து வழங்க கோரிக்கை
/
அதிகாரிகளின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு; 'பெஞ்சல்' நிவாரணத் தொகையை விரைந்து வழங்க கோரிக்கை
அதிகாரிகளின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு; 'பெஞ்சல்' நிவாரணத் தொகையை விரைந்து வழங்க கோரிக்கை
அதிகாரிகளின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு; 'பெஞ்சல்' நிவாரணத் தொகையை விரைந்து வழங்க கோரிக்கை
ADDED : ஜூன் 04, 2025 01:18 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளது. இங்குள்ள விவசாயிகள் நெல், கரும்பு, பருத்தி, சோளம், வேர்க்கடலை, உளுந்து, மரவள்ளி உட்பட பல்வேறு வகை வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
கடந்த, 2024ம் ஆண்டு டிசம்பர் துவக்கத்தில் 'பெஞ்சல்' புயல் காரணமாக மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது.
தொடர்ந்து, 3 நாட்களுக்கு மேலாக பெய்த மழையால் விளை நிலங்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் அழுகி, விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, 33 சதவீதம் அல்லது அதற்குமேல் பாதிக்கப்பட்ட நெல் உள்ளிட்ட இறவை பாசன பயிர்களுக்கு, ஒரு ெஹக்டருக்கு 17 ஆயிரம் ரூபாய்; பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்களுக்கு 22 ஆயிரத்து 500 ரூபாய்; மானாவாரி பயிர்களுக்கு 8,500 ரூபாய்; என நிவாரணத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
பயிர் சேதம் கணக்கீடு
இதைத்தொடர்ந்து, வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், வி.ஏ.ஓ.,க்களுடன் இணைந்து பயிர் சேத விபரங்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதில், வேளாண் பயிர்களில், 71 ஆயிரத்து 902 விவசாயிகளின், 30 ஆயிரத்து 798 ெஹக்டர் பரப்பிலான பயிர்கள் சேதமடைந்தது தெரிய வந்தது.
அதேபோல், தோட்டக்கலை பயிர்களில், 12 ஆயிரத்து 678 விவசாயிகளின், 8,695 ெஹக்டர் பரப்பிலான பயிர்கள் சேதமடைந்திருந்ததும் கண்டறியப்பட்டது. மொத்தமாக, 84 ஆயிரத்து 580 விவசாயிகளின், 39 ஆயிரத்து 493 ெஹக்டர் பரப்பிலான பயிர்களுக்கு நிவாரண நிதி வழங்க, மாவட்டம் நிர்வாகம் சார்பில் தமிழக அரசிடம் அறிக்கை அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகளுக்கு, 49 கோடியே ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 90 ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. கடந்த மார்ச் மாதம் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நிவாரண தொகை செலுத்தப்பட்டது.
ஆனால், மாவட்டம் முழுவதும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை கிடைக்கவில்லை.
விவசாயிகள் அதிருப்தி
இது குறித்து விவசாயிகள் கேட்ட போது, வங்கி கணக்கு எண், ஐ.எப்.எஸ்.சி., கோடு உள்ளிட்ட விபரங்கள் தவறாக பதிவு செய்தது உட்பட பல்வேறு காரணங்களை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், நிவாரணத்தொகை கிடைக்காததற்கு அதிகாரிகளின் அலட்சிய போக்கு தான் காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
தொடர்ந்து, கடந்த மார்ச் மாத இறுதியில் ஒன்றியம் வாரியாக நிவாரண தொகை கிடைக்கப்பெறாத விவசாயிகளின் தகவல்கள் மீண்டும் சேகரிக்கப்பட்டன.
விவசாயி சங்க பிரதிநிதிகள் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்புக் கூட்டத்தில் நிவாரணத்தொகை வராதது குறித்து கோரிக்கை வைத்தனர். ஆனால், உரிய பதில் கிடைக்கப்பெறவில்லை.
இந்நிலையில், 3 மாதங்களுக்கு மேலாகியும் நிவாரணத்தொகை கிடைக்காததால் வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மீது விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 'இந்த பிரச்னைக்கு முக்கிய காரணமே, அதிகாரிகளின் அலட்சியம் தான். இந்த விவகாரத்தில், கலெக்டர் தலையிட்டு உடனடியாக நிவாரண தொகை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.