/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி கமிட்டியில் எடை போடுவதில் பிரச்னை விவசாயிகள் சாலை மறியல்
/
கள்ளக்குறிச்சி கமிட்டியில் எடை போடுவதில் பிரச்னை விவசாயிகள் சாலை மறியல்
கள்ளக்குறிச்சி கமிட்டியில் எடை போடுவதில் பிரச்னை விவசாயிகள் சாலை மறியல்
கள்ளக்குறிச்சி கமிட்டியில் எடை போடுவதில் பிரச்னை விவசாயிகள் சாலை மறியல்
ADDED : ஏப் 21, 2025 10:58 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் விளைபொருட்களை எடை போடுவதில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு விளை பொருட்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். தற்போது எள் சீசன் துவங்கியுள்ளதால் கமிட்டிக்கு எள் வரத்து அதிகரித்துள்ளது.
கமிட்டியில் விவசாயிகளின் விளைபொருட்களை கமிட்டிக்கு சொந்தமான சணல் மூட்டைகளில் வைத்து எடைபோடுவது வழக்கம். நேற்று ஒரே நாளில் 1200க்கும் அதிகமான எள் மூட்டைகள் வந்ததால் மூட்டைகளுக்கு மாற்றியது போக மீதமுள்ள மூட்டைகளை, விவசாயிகளின் பிளாஸ்டிக் சாக்குகளிலேயே வைத்து எடை போடப்பட்டது.
கமிட்டி சார்பில் மூட்டை ஒன்றுக்கு ஒன்றரை கிலோ எடை கூடுதலாக கணக்கிட்டு எள் எடுத்துக் கொள்வது வழக்கம். விசாயிகளின் பிளாஸ்டிக் மூட்டைகளுக்கு 350 கிராம் கணக்கிட்டு அதற்கான எடையில் எள் எடுக்கப்பட்டது.
இதனை எதிர்த்த விவசாயிகள் 100 கிராம் எடை கொண்ட சாக்கிற்கு ஏன் 350 கிராம் எள் எடுக்கிறீர்கள் எனக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், எடை போடும்போது சேதாரமாகும் எள்ளை எடுக்க விடாமல் தடுப்பதாகவும், மூட்டை ஒன்றுக்கு 25 ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்வதாகவும், விவசாயிகளை தரக்குறைவாக பேசுவதாகவும் கூறி 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கச்சிராயபாளையம் சாலையில் நேற்று காலை 8:00 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த டி.எஸ்.பி., தேவராஜ் நேரில் சென்று, விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, 8:10 மணிக்கு மறியலை கைவிடச் செய்தனர்.
பின், கமிட்டிக்குள் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு, கண்காணிப்பாளர் சந்தியா விவசாயிகளிடம், 'கமிட்டிக்கு எள் வரத்து அதிகரித்துள்ளதால், கமிட்டி சாக்கிற்கு மூட்டைகளை மாற்ற முடியவில்லை. பிளாஸ்டிக் மூட்டைகள் சராசரியாக 350 கிராம் எடை இருக்கும் என்பதால் அதற்கான அளவிற்கான எள் எடுக்கப்படுகிறது.
மூட்டைகளின் இறக்கு கூலிக்கான கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறதே தவிர, எடை போடுவதற்கு கட்டணம் இல்லை. கீழே சிந்தும் எள் விவசாயிகளிடம்தான் வழங்கப்படும்' எனக்கூறி சமாதானம் செய்தார்.