/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வேளாண் அதிகாரியை கண்டித்து விவசாயிகள்... தர்ணா
/
வேளாண் அதிகாரியை கண்டித்து விவசாயிகள்... தர்ணா
ADDED : பிப் 17, 2024 04:43 AM

கள்ளக்குறிச்சி : வேளாண் பட்ஜெட் குறித்து அமைச்சர் பன்னீர்செல்வம் முன்னிலையில் அனைத்து மாவட்ட விவசாயிகளுடன் நடந்தவீடியோ கான்பிரன்சில் விவசாயிகள் அல்லாதோர் பங்கேற்றதை கண்டித்து குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள்புகார் தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கள்ளக்குறிச்சியில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் தலைமையில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயராகவன், வேளாண் இணை இயக்குனர் அசோக்குமார், தோட்டக்கலை துணை இயக்குனர் சசிகலா, கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை-2 மேலாண்மை இயக்குனர் முருகேசன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகேசன், மின்வாரிய செயற் பொறியாளர் கணேசன் உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் விவசாயிகள் குறைகள் மற்றும் புகார்கள் குறித்து பேசியதாவது:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காட்டு பன்றிகளை அழிக்க வேண்டும். நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும். கரும்புக்கான வெட்டுக்கூலியை ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும்.
புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்படாமல் நிலுவையிலேயே உள்ளது. கள்ளக்குறிச்சி நகரில் மொத்த காய்கறி மற்றும் பூ விற்பனை மார்க்கெட் அமைக்க வேண்டும். வேளாண் விரிவாக்க மையத்தில் விற்பனை செய்யும் தரமற்ற விவசாய கருவிகள், வெளி மார்க்கெட்டை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
உதவி வேளாண் அலுவலர்கள் விவசாயிகளை சந்தித்து பேசுவதே இல்லை, வீரியமிக்க மக்காச்சோள பயிர்களை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். சாத்தனுார் வலது புற கால்வாயின் நேரடி மற்றும் கிளை கால்வாய் துார்வாரப்பட வேண்டும்.
கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் முறையாக நடைபெறுவதில்லை. பி.எம்., கிசான் திட்டத்தில் தகுதி வாய்ந்த சில பயனாளிகளுக்கு ஊக்கத்தொகை கிடைப்பதில்லை.
விவசாயிகள் அளிக்கப்படும் மனுக்களுக்கு உரிய தீர்வு கிடைப்பதில்லை, முடியனுார் உயர்நிலைப்பள்ளி கட்டடம் கட்டுவதற்கு நபார்டு திட்டத்தில் இருந்து நிதி ஒதுக்கியும், இதுவரை வகுப்பறைகள் கட்டப்படாமல் உள்ளது.
இவ்வாறு விவசாயிகள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை தெரிவித்து பேசினர்.
முன்னதாக வேளாண் பட்ஜெட்டினை முன்னிட்டு, அமைச்சர் பன்னீர்செல்வம் முன்னிலையில் அனைத்து மாவட்ட விவசாயிகளுடன் வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சார்பில் பங்கேற்ற இரண்டு விவசாயிகள் யார் என்றே தெரியவில்லை, விவசாயி அல்லாத இருவரை வீடியோ கான்பிரன்சில் பங்கேற்க வைத்துள்ளனர். இது குறித்து விசாரணை செய்து, மாவட்ட வேளாண் துணை இயக்குனர் சுந்தரத்தை பணியிட மாற்றம் செய்யவேண்டும். டில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் விவசாயிகள் கோஷமிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அதிகாரிகள் பேச்சு வார்த்தையடுத்து சமாதானமாகினர். அதனைத் தொடர்ந்து கூட்டம் துவங்கியது.