/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்வராயன் மலையில் 'போர்வெல்' : விவசாயிகள் கோரிக்கை
/
கல்வராயன் மலையில் 'போர்வெல்' : விவசாயிகள் கோரிக்கை
கல்வராயன் மலையில் 'போர்வெல்' : விவசாயிகள் கோரிக்கை
கல்வராயன் மலையில் 'போர்வெல்' : விவசாயிகள் கோரிக்கை
ADDED : மே 15, 2025 11:56 PM

கச்சிராயபாளையம்: கல்வராயன் மலையில் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 'போர்வெல்' அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கல்வராயன்மலை பெரிய கல்வராயன், சின்ன கல்வராயன் என இரண்டு பிரிவுகளை கொண்டுள்ளது. பெரிய கல்வராயன் மலை கடல் மட்டத்திலிருந்து 4 ஆயிரத்து 500 அடி உயரமும், சின்ன கல்வராயன்மலை 3 ஆயிரம் அடி உயரமும் கொண்டது. இதன் மொத்த நிலபரப்பு 57 லட்சத்து 11 ஆயிரத்து 124 ஹெக்டேர். கல்வராயன் மலையில், 145 க்கும் மேற்பட்ட கிராமங்களில், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்கள் விவசாயம், கால்நடை பராமரிப்பு, கடுக்காய், தேன் சேகரித்தல் போன்ற தொழில்களை தங்களின் முக்கிய வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.
கல்வராயன் மலையில் மானாவாரி முறையில் சாமை, வரகு, தினை, மரவள்ளி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
குறிப்பாக இங்கு பருவமழை துவங்கும் காலங்களில் மரவள்ளியை விவசாயிகள் நடவு செய்கின்றனர். 10 மாதங்களுக்கு பிறகு அதனை அறுவடை செய்கின்றனர்.
இந்நிலையில் விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாததால், வெளி மாநிலங்களுக்கு கூலி வேலைக்கு செல்லும் நிலை அதிகரித்துள்ளது.
இங்குள்ள விவசாயிகள் சிலர் மட்டும் நிலத்தில் சிறிய அளவில் கிணறு அமைத்து அதில் டீசல் இன்ஜின் மூலம் தண்ணீர் இறைத்து தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ் போன்ற காய்கறி பயிர்களையும் சாமந்தி, சம்பங்கி போன்ற பூ வகைகளையும் சாகுபடி செய்கின்றனர்.
ஆறு மற்றும் ஓடை ஓரங்களில் நிலம் அமைந்துள்ள விவசாயிகள் நீர் நிலைகளில் பம்ப் செட் அமைத்து அதிலிருந்து தண்ணீர் எடுத்து சாகுபடி செய்து வருகின்றனர்.
கல்வராயன் மலையில் விவசாயத்தை மேம்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இங்கு தோட்ட பயிர்களான மிளகு, காப்பி, அன்னாசி பழம் போன்ற பல்வேறு பண பயிர்கள் வளர்வதற்கு ஏற்ற சூழல் உள்ளது.
இதனால் தோட்டக்கலை துறை சார்பில் சோதனை அடிப்படையில் கல்வராயன் மலையில் சில இடங்களில் விவசாயிகள் மிளகு, காப்பி போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக தண்ணீர் வசதி மற்றும் கிணறு உள்ள விவசாயிகள் மட்டுமே மிளகு செடிகளை நடவு செய்து அதன் மூலம் வருமானம் பெறுகின்றனர்.
கல்வராயன் மலையில், 90 சதவீத விவசாயிகள் இன்றளவும் மானாவாரி முறையில் மரவள்ளியை மட்டுமே சாகுபடி செய்து வருகின்றனர். விவசாய நிலங்களில் கிணறு அமைக்க, அதிக பொருட்செலவு ஏற்படுவதாலும், போதிய வருமானம் இல்லாததாலும் விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:
கல்வராயன் மலையில் போர்வெல் அமைக்க வனத்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
தண்ணீர் வசதி இல்லாததால் மிளகு மற்றும் காப்பி செடிகளை சாகுபடி செய்ய ஆர்வமுள்ள விவசாயிகளும் மானாவாரி பயிர்களையே சாகுபடி செய்து வருகின்றனர். போர்வெல் அமைக்கவும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கவும் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டால் காப்பி, மிளகு, அன்னாசி போன்ற பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வாழ்வதாரத்தை மேம்படுத்த இயலும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.