/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புதிய காற்றழுத்தத்தால் விவசாயிகள்... கலக்கம்; பயிர் சேதத்தை தடுக்க கோரிக்கை
/
புதிய காற்றழுத்தத்தால் விவசாயிகள்... கலக்கம்; பயிர் சேதத்தை தடுக்க கோரிக்கை
புதிய காற்றழுத்தத்தால் விவசாயிகள்... கலக்கம்; பயிர் சேதத்தை தடுக்க கோரிக்கை
புதிய காற்றழுத்தத்தால் விவசாயிகள்... கலக்கம்; பயிர் சேதத்தை தடுக்க கோரிக்கை
ADDED : டிச 16, 2024 04:49 AM
பெஞ்சல் புயல் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக தென்பெண்ணை ஆற்று படுகையை ஒட்டி அமைந்துள்ள திருக்கோவிலுார், மூங்கில்துறைப்பட்டு, மணலுார்பேட்டை ஆகிய பகுதியில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது.
ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது. கோமுகி, மணிமுத்தா, அணைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பின. இவ்வளவு மழை பெய்தும் வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பு காரணமாக இன்னும் பல ஏரிகள் நிரம்ப வில்லை.
இந்நிலையில் கடந்த 12ம் தேதி பெய்த மழை காரணமாக நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி அபாய கட்டத்தை எட்டியுள்ளது. மாவட்டத்தில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் நெற்பயிர்கள் பல இடங்களில் நீரீல் மூழ்கியது.
நெற்கதிர்கள் முற்றும் தருவாயில் மேலும் மழை தொடர்ந்தால் அவை அழுகி மகசூல் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்படும். அதேபோல் மானாவாரி பயிராக சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து, மக்காச்சோளம் ஆகிய பயிர்களும் இனியும் மழை பெய்தால் கடும் சேதத்தை சந்திக்க நேரிடும்.
பெரும்பாலான இடங்களில் மக்காச்சோளம் பயிர்கள் கனமழையால் உடைந்து சேதம் அடைந்துள்ளது. பூத்து காய்க்கும் பருவத்தில் உள்ள உளுந்து பயிர்கள் தொடர் மழையால் நீரில் மூழ்கியது.
இச்சூழ்நிலையில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மாவட்டத்தில் கனமழை பெய்தால் விளைபயிர்கள் பெருத்த சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
பல இடங்களில் வயல்வெளிகளை ஒட்டி உள்ள வடிகால் வாய்க்கால்கள் துார்ந்தும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாலும் மழை நீர் வெளியேற முடியாமல் விளை நிலத்தில் தேங்கி நிற்கிறது.
இதன் காரணமாக பல நாட்கள் தொடர்ந்து பயிர்களில் தண்ணீர் தேங்கி சேதம் அடைந்து நஷ்டம் ஏற்படும்.
மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் மழை தொடரும் பட்சத்தில் நீர்நிலைகள் உடையும் அபாயம் ஏற்படும். இது விவசாயிகளை கலக்கமடைய செய்துள்ளது.
இச்சூழ்நிலையில் பயிர்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
குறிப்பாக தண்ணீர் வடிகால் வாய்க்கால்களை உடனடியாக ஆழப்படுத்தி நீர் வெளியேற வழி ஏற்படுத்த வேண்டும்.
பலவீனமாக உள்ள ஏரிக்கரைகளை செப்பனிட்டு பலப்படுத்த வேண்டும். நீர் வழித்தடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவரிடம் இருந்து அதனை மீட்டு அங்கு தண்ணீர் தடையின்றி செல்ல பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டால் கனமழையிலிருந்து பயிர்களை பாதுகாக்க முடியும்.