ADDED : ஆக 12, 2025 11:04 PM

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே டைல்ஸ் ஷோரூம் தீப்பிடித்து எரிந்ததில், பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.
உளுந்துார்பேட்டை அடுத்த நொணையவாடி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார், 49; இவர், சேலம் தேசிய நெடுஞ்சாலையில் எம்.எஸ்.. தக்கா பகுதியில், உபயம் டிரேடர்ஸ் என்ற டைல்ஸ் விற்பனை கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல் நேற்று காலை 10:00 மணிக்கு கடையில் பணிபுரியும் பெண் ஒருவர் கடையில் விளக்கு ஏற்றினார்.
அப்போது விளக்கு தவறி கீழே விழுந்ததில், தரை விரிப்பு உள்ளிட்ட பொருட்களில் தீப்பிடித்து எரிய துவங்கியது. அங்கிருந்தவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர். ஆனால், கடை முழுவதும் தீப்பற்றி எரிய துவங்கியது. கடையில் இருந்த ஊழியர்கள் வெளியேறி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் உளுந்துார்பேட்டை தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் கடையில் இருந்த மின்விசிறிகள், மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. இது குறித்து உளுந்துார்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.