/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தியாகதுருகம் பகுதியில் விதிகளை மீறி பிளாட் விற்பனை அமோகம்: கலெக்டர் அலுவலகத்தால் மனைகள் உச்சத்தை தொட்டது
/
தியாகதுருகம் பகுதியில் விதிகளை மீறி பிளாட் விற்பனை அமோகம்: கலெக்டர் அலுவலகத்தால் மனைகள் உச்சத்தை தொட்டது
தியாகதுருகம் பகுதியில் விதிகளை மீறி பிளாட் விற்பனை அமோகம்: கலெக்டர் அலுவலகத்தால் மனைகள் உச்சத்தை தொட்டது
தியாகதுருகம் பகுதியில் விதிகளை மீறி பிளாட் விற்பனை அமோகம்: கலெக்டர் அலுவலகத்தால் மனைகள் உச்சத்தை தொட்டது
ADDED : ஜன 17, 2025 06:59 AM
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ரியல் எஸ்டேட் தொழிலின் முக்கிய சந்தையாக தியாகதுருகம் மாறி உள்ளது.இதற்கு முக்கிய காரணம் தியாகதுருகம் அருகே மணிமுக்தா ஆற்றங்கரையோரம் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டுமான பணிகள் நடந்து வருவதேயாகும்.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உதயமானது. பெருந்திட்ட வளாகம் அமைக்க கள்ளக்குறிச்சியை ஒட்டி போதிய அரசு இடம் இல்லாததால் சேலம்- சென்னை நான்கு வழி சாலையை ஒட்டி வீரசோழபுரம் சிவன் கோவிலுக்கு சொந்தமான இடம் தேர்வானது.
இங்கு பூமி பூஜை போட்டு கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகள் துவங்கிய நிலையில், கோவில் இடத்தில் கலெக்டர் அலுவலகம் கட்ட ஆட்சேபனை தெரிவித்து தொடரப்பட்ட நீதிமன்ற வழக்கு காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அதே இடத்திலேயே கலெக்டர் அலுவலகம் கட்ட அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகள் மீண்டும் கடந்த செப்., மாதம் துவங்கியது.இதன் காரணமாக கலெக்டர் அலுவலகம் அமைய உள்ள இடத்தை சுற்றி நிலத்தின் விலை திடீரென உச்சத்தை அடைந்தது.
குறிப்பாக வீ. பாளையம் அருகே அமைந்துள்ள டோல்கேட்டில் இருந்து தியாகதுருகம் புறவழி சாலை வரை உள்ள விளைநிலங்களை ரியல் எஸ்டேட் அதிபர்கள் அதிக விலை கொடுத்து வாங்கி பிளாட்டுகளாக மாற்றி வருகின்றனர். இவற்றில் பெரும்பாலானவை முறையான டி.டி.சி.பி., அனுமதி இன்றி மனைகளாக மாற்றப்பட்டு வருகிறது.
அங்கீகாரம் இல்லாத மனைகளை பதிவு செய்வதற்கான தடை அமலில் உள்ளது.
தனிநபர் பெயரில் உள்ள 10 சென்ட் வரையிலான விவசாய நிலத்தை மனையாக பதிவு செய்ய வரும் பத்திரங்களை ஏற்கலாம் இதை லேஅவுட் எனப்படும் மனை பிரிவாக கருதக்கூடாது. குறிப்பாக 10 சென்ட் அளவு இடத்திற்கு குறைவாக இருந்தால் அவற்றை விற்பனை செய்ய முறையாக டி.டி.சி.பி., அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
இந்த விதிகளை தங்களுக்கு சாதகமாக வைத்துக் கொண்டு விவசாய நிலங்களை 10 சென்ட் அளவுக்கு பிரித்து முறையான அனுமதி இன்றி பிளாட் விற்பனை முறைகேடு கனஜோராக நடக்கிறது.
அங்கீகாரம் இல்லாத மனைகளை விற்பனை செய்வதற்கு அரசியல் பின்புலமும் அதிகாரிகளின் ஆதரவும் இருப்பவர்கள் கொழுத்த லாபம் சம்பாதித்து வருகின்றனர்.
இதனால் தியாகதுருகம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணமழை கொட்டுகிறது.பத்திரப்பதிவு அலுவலகத்தில் ரியல் எஸ்டேட் புரோக்கர்களுக்கு மட்டுமே முதல் மரியாதை என்றும் சாமானிய மக்களால் சென்றுவர முடியவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
இதன் காரணமாக அரசுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற அரசு அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்குபவர்கள் அங்கு வீடு கட்டும் போது பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போதுதான் அதன் சிக்கல்களை உணருகின்றார்கள்.
இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் லாபம் கிடைத்தால் போதும் என்று ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் விளைநிலங்களை பிளாட்டுகளாக மாற்றி விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அப்பாவி மக்கள் பாதிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
உடனடியாக இவ்விஷயத்தில் அரசு தலையிட்டு தியாகதுருகம் பகுதியில் முறையான அங்கீகாரம் இல்லாத மனைகளை விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும்.