ADDED : ஜூன் 25, 2026 06:46 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கோமுகி நதிக்கரையில் நகராட்சி ஈமச்சடங்கு மண்டபம், சரோஜா சண்முகம் அறக்கட்டளை சார்பில் சீரமைக்க்பட்டது.
கள்ளக்குறிச்சி நகராட்சி கோமுகி நதிக்கரை நந்தவனத்தில் பல ஆண்டுகளாக இறந்தவர்களின் ஈமச்சடங்குகள் செய்யப்பட்டு வருகிறது. அதற்கான கொட்டகை, பராமரிப்பின்றி இருந்து வருவதை தொடர்ந்து அதனை மேம்படுத்த நகராட்சி நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் அறிவுறுத்தல்படி, கள்ளக்குறிச்சி சரோஜா சண்முகம் அறக்கட்டளை சார்பில் ஈமச்சடங்கு மண்டப கொட்டகையை சுற்றிலும் கிரில் தடுப்புகள் ஏற்படுத்தி, உள் பகுதியில் மின் விளக்கு வசதி அமைத்து, 20 சேர்கள் வழங்கி மேம்படுத்தப்பட்டது.
மேலும், சுற்றுப்புறங்களை துாய்மைப்படுத்தி, பாதுகாப்பு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட ஈமச்சடங்கு மண்டப சாவியை கள்ளக்குறிச்சி சரோஜா சண்முகம் அறக்கட்டளை நிர்வாகிகள் சண்முகம், சரோஜா, சுதா, வைத்திலிங்கம் ஆகியோர், நகராட்சி சேர்மன் சுப்ராயலுவிடம் ஒப்படைத்தனர்.
