/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போலீஸ் ஆசியுடன் டீசல் திருடும் கும்பல்
/
போலீஸ் ஆசியுடன் டீசல் திருடும் கும்பல்
ADDED : ஜூலை 01, 2025 01:40 AM
தியாகதுருகம் மற்றும் எலவனாசூர்கோட்டை இடையே இரவு நேரங்களில் நான்கு வழிச்சாலையில் செல்லும் டேங்கர் லாரிகளில் இருந்து போலீஸ் ஆசியுடன் டீசல் திருட்டு கும்பல் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தியாகதுருகம் மற்றும் எலவனாசூர்கோட்டை இடையே பல ஆண்டுகளாக நுாதன டீசல் திருட்டு நடந்து வருகிறது. குறிப்பாக வாழவந்தான் குப்பம், செம்பியன்மாதேவி பகுதியில் சேலம் - சென்னை நான்கு வழிச் சாலையின் ஓரம் நிலம் வைத்திருக்கும் சிலர் அவ்வழியே செல்லும் டேங்கர் லாரிகளை மடக்கி டிரைவர் உதவியுடன் டீசல் திருட்டில் ஈடுபடுகின்றனர்.
லாரிகள் சென்று மறைவாக நிற்பதற்கு வசதியாக கரும்பு வயலையொட்டி தென்னை மட்டைகளைக் கொண்டு தடுப்பு ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர். இரவு நேரத்தில் டார்ச் விளக்கை அடித்து டேங்கர் லாரி டிரைவர்களுக்கு சிக்னல் கொடுக்கின்றனர்.
ரெகுலராக செல்லும் டிரைவர்களுக்கு இந்த இடம் வந்ததும் சாலையிலிருந்து ஓரம் கட்டி தென்னை மட்டை தடுப்புக்குள் லாரியை நிறுத்தி விடுகின்றனர். லாரியின் வால்வு உள்ள இடத்தில் வைக்கப்படும் சீல் மிக சாதுரியமாக நீக்கப்பட்டு கேன்களில் டீசலை நிரப்பிக் கொள்கின்றனர்.
இதனை மார்க்கெட் விலையை விட பாதி விலைக்கு வாங்கிக் கொண்டு டிரைவரிடம் பணத்தை கொடுத்து அனுப்பி வைக்கின்றனர். டீசல், பெட்ரோல், சமையல் எண்ணெய், இன்ஜின் ஆயில் உட்பட எதுவாக இருந்தாலும் வாங்கிக் கொள்கின்றனர்.
இவ்வாறு திருடிய எண்ணெயை சுற்றுவட்டார கிராமங்களில் விவசாய உழவு டிராக்டர்கள், டிப்பர் லாரி வைத்திருப்பவர்களிடம் மார்க்கெட் விலையை விட 10 ரூபாய் குறைத்து விற்பனை செய்கின்றனர்.
நாள் ஒன்றுக்கு 3 முதல் 4 டேங்கர் லாரிகளில் இருந்து திருடப்படும் டீசலை எப்படி, எங்கு பதுக்கி வைக்கின்றனர் என்பது கேள்விக்குறியாக உள்ளது. சிலர், பெட்ரோல் பங்க்குகளில் வைத்திருக்கும் பெரிய டேங்க்கை கரும்புத் தோட்டத்தில் பூமியில் புதைத்து வைத்து எண்ணெயை அதில் சேமித்து விற்பனை செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது. இது போன்ற நுாதன டீசல் திருட்டு குறித்து சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீசாரின் ஆசியுடன் தொடர்வதாக குற்றச்சாட்டு உள்ளது.
சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், புதுச்சேரி ஆகிய பெருநகரங்களில் இருந்து டேங்கர் லாரிகள் இயக்கப்படுவதால் பாதிக்கப்படுபவர்களிடம் இருந்து இதுகுறித்து பெரிய அளவில் புகார்கள் வருவதில்லை. இதனால் டீசல் திருட்டு தொழில் இங்கு கனஜோராக நடக்கிறது.