
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கோமுகி ஆற்றுப்பாலத்தையொட்டி கொட்டப்பட்ட குப்பைகள், தினமலர் செய்தி எதிரொலியாக அகற்றி, சுத்தம் செய்யப்பட்டன.
கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் சாலையில் கோமுகி ஆற்றுப்பாலத்தின் ஓரமாக சிலர் குப்பைகளை கொட்டுகின்றனர். குறிப்பாக, இறைச்சி கடை உரிமையாளர்கள் கழிவுகளை மூட்டைகளாக கட்டி, அப்பகுதியில் வீசி செல்வது தொடர்கதையாக உள்ளது.
இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், தெருவில் சுற்றித்திரியும் நாய்களும் அந்த மூட்டைகளை கிழித்து, இறைச்சி கழிவுகளை ஆங்காங்கே வீசி செல்கின்றன. குப்பைகள் அதிகமானதும் அங்கு தீயிட்டு கொளுத்தப்படுகிறது.
இது குறித்து சமீபத்தில் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக ஆற்றுப்பாலம் பகுதியில் குப்பைகளை நகராட்சி துாய்மை பணியாளர்கள் அகற்றி, கிருமிநாசினியை தெளித்தனர்.