ADDED : ஜன 05, 2026 04:58 AM
கெத்து காட்டிய மூதாட்டிகள் கோலப்போட்டியில் சிக்கு கோலம் பிரிவில் இளம்பெண்களைவிட 60 வயதுக்கு மேற்பட்ட மூதாட்டிகள், அதிகளவில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். புள்ளி வைத்து அதனை சுற்றி மிக லாவகமாக கோடுகளை வரைந்து சிக்கலான கோலத்தை அழகாக போட்டு பலரையும் வியப்பில் ஆழ்த்தினர். ரங்கோலி, டிசைன் கோலத்தைவிட சிக்கு கோலம் போடுவது நமது பாரம்பரிய முறையாகும். இதனை வயதில் மூத்த பெண்கள் பங்கேற்று இளம்பெண்களைவிட தாங்கள் தனித்திறமை வாய்ந்தவர்கள் என்பதை நிருபித்து, பரிசுகளை தட்டி சென்றனர்.
விழிப்புணர்வு கோலங்கள் ரங்கோலி மற்றும் டிசைன் கோலப்பிரிவில் பலர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்துக்களை கோலங்களாக வரைந்தனர். அதில் சாலை பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, விவசாயம் காப்போம், புத்தகம் வாசிப்பதன் அவசியம், இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம், சமூக வலைதளத்தால் ஏற்படும் சமூக பாதிப்பு ஆகியவற்றை மைய கருத்தாக கொண்டு பலர் விழிப்புணர்வு கோலங்கள் போட்டனர்.
பாரம்பரியத்தை நேசிக்கும் இளம்பெண்கள் தமிழர்களின் தனித்தன்மையை வெளிப்படுத்தும் கோலமிடும் கலை, தற்போதைய இளம்பெண்களிடம் குறைந்து வருவதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் அது உண்மையில்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில் நேற்று நடந்த தினமலர் மெகா கோலப்போட்டியில், இளம்பெண்கள் அதிகளவில் பங்கேற்று பல்வேறு டிசைன் மற்றும் ரங்கோலி கோலத்தில் பரிசு வென்று தங்களின் திறனை நிரூபித்தனர்.
இது நம் பாரம்பரிய கலையான கோலமிடும் பழக்கத்தை அடுத்த தலைமுறையினர் ஆர்வமுடன் தொடர்ந்து வருவதற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.
கை நிறைய பரிசுகள் கோலப்போட்டியில் பங்கேற்ற அனைவரையும் ஊக்கப்படுத்தும் வகையில் இரு கைகளிலும் துாக்கி செல்ல முடியாத அளவிற்கு பரிசு பொருட்கள் அள்ளி வழங்கப்பட்டது. அதை பெற்றுக்கொண்ட போட்டியாளர்கள் இருகைகளில் எடுத்து செல்ல முடியாமல் திக்கு முக்காடினர்.
வண்ண கோலம் பூண்ட வீரசோழபுரம் வீரசோழபுரம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஜே.எஸ். குளோபல் சிட்டி வளாகத்தில் நடந்த மெகா கோலப்போட்டியில் பலர் ஆர்வமுடன் பங்கேற்க மாவட்டம் முழுவதலிமிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வந்திருந்தனர். கோலம் போடுவதற்கான ஒதுக்கப்பட்ட அளவீடுகளில் பல வர்ண கோல மாவுகளை துாவியும், பொருட்களை கொண்டும் கோலமிட்டனர்.

