/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கோமாரி தடுப்பூசி பணி 29ம் தேதி... துவக்கம்:2.91 லட்சம் கால்நடைகளுக்கு செலுத்த இலக்கு
/
கோமாரி தடுப்பூசி பணி 29ம் தேதி... துவக்கம்:2.91 லட்சம் கால்நடைகளுக்கு செலுத்த இலக்கு
கோமாரி தடுப்பூசி பணி 29ம் தேதி... துவக்கம்:2.91 லட்சம் கால்நடைகளுக்கு செலுத்த இலக்கு
கோமாரி தடுப்பூசி பணி 29ம் தேதி... துவக்கம்:2.91 லட்சம் கால்நடைகளுக்கு செலுத்த இலக்கு
ADDED : டிச 24, 2025 05:40 AM

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய்கள் கட்டுப்படுத்தும் திட்டத்தில்வரும் 29ம் தேதி முதல் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கப்பட உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள விவசாயிகள் பசு, எருமை வளர்த்து, பால் விற்பனை செய்தும், ஆடு, கோழி, பன்றி உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து, சந்தைகளில் விற்பனை செய்தும் வருவாய் ஈட்டுகின்றனர்.
இதில், 'கோமாரி' நோயால் மாடுகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன. நோய் பாதித்த கால்நடைகளுக்கு காய்ச்சலும், வாய் மற்றும் கால் பகுதியில் கொப்புளங்களும் ஏற்படும்.
கோமாரி நோயால் பாதிப்புக்குள்ளான கால்நடைகளின் வாயிலிருந்து நுரை கலந்த உமிழ்நீர், நுால் போல் ஒழுகும். அசை போடும் போது 'சப்பு கொட்டுவது' போல சத்தம் உண்டாகும்.
வாயின் உட்பகுதி, ஈறுகள், நாக்கு, மடி மற்றும் கால் குளம்புகளின் நடு பகுதி ஆகியவற்றில் கொப்புளங்கள் ஏற்பட்டு புண்ணாகும்.
இதனால் கால்நடைகள் தீவனம் சாப்பிடாமலும், நடக்க முடியாமலும் சிரமப்படும். குறிப்பாக, காற்றி ன் மூலம் பரவும் நோய் என்பதால், கோமாரி பாதித்த கால்நடைக்கு அருகில் உள்ள விலங்குகளுக்கும் எளிதில் நோய் பரவும்.
இதை தடுப்பதிற்காக, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், தேசிய கால்நடை நோய்கள் கட்டுப்படுத்தும் திட்டத்தில் ஆண்டுதோறும் 2 முறை, கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
தடுப்பூசி செலுத்துவதால் சில ஆண்டுகளாக மாவட்டத்தில் கோமாரி நோய் தாக்குதலால் கால்நடைகள் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி கோட்டத்தில் 1 லட்சத்து 81 ஆயிரத்து 250 கால்நடைகள் மற்றும் திருக்கோவிலுார் கோட்டத்தில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 400 கால்நடைகள் என மொத்தம் 2 லட்சத்து 91 ஆயிரத்து 650 கால்நடைகள் உள்ளன.
மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு 8வது சுற்று கோமாரி தடுப்பூசி செலுத்தும் பணி வரும் 29ம் தேதி துவங்குகிறது.
கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்கள் அனைத்து கிராமங்களுக்கும் சென்று முகாம் அமைத்து, அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு வசதியாக 57 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து 21 நாட்கள் கோமாரி தடுப்பூசி முகாம் நடைபெறும். சினையுற்ற கால்நடைகள், பால் கறக்கும் பசு மற்றும் எருமை மாடு இனங்களுக்க தடுப்பூசி செலுத்துவது அவசியம்.
தடுப்பூசி செலுத்துவதால், பால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாது. எனவே, கால்நடைகளை வளர்ப்பவர்கள் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் கோமாரி தடுப்பூசி திட்டத்திற்கு ஒத்துழைப்பு அளித்து, பொதுமக்கள் கால்நடைகளுக்கு கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என கால்நடை பராமரிப்பத்துறை கேட்டக் கொண்டுள்ளது.

