/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மழை காலத்தில் கோமுகி ஆற்றில் தண்ணீர் திறப்பதில்... சிக்கல்; கரைகளை பலப்படுத்தி புனரமைக்க நடவடிக்கை தேவை
/
மழை காலத்தில் கோமுகி ஆற்றில் தண்ணீர் திறப்பதில்... சிக்கல்; கரைகளை பலப்படுத்தி புனரமைக்க நடவடிக்கை தேவை
மழை காலத்தில் கோமுகி ஆற்றில் தண்ணீர் திறப்பதில்... சிக்கல்; கரைகளை பலப்படுத்தி புனரமைக்க நடவடிக்கை தேவை
மழை காலத்தில் கோமுகி ஆற்றில் தண்ணீர் திறப்பதில்... சிக்கல்; கரைகளை பலப்படுத்தி புனரமைக்க நடவடிக்கை தேவை
ADDED : ஆக 21, 2025 07:38 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், விவசாயிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் கோமுகி ஆற்றில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணை விவசாயிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. அணையை நம்பி 46 கிராமங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
அக்., - நவ., மாத பருவ மழை காலங்களில் மலை பகுதியில் பெய்யும் மழை நீர் கல்படை, பொட்டியம், மல்லிகைபாடி, பரங்கிநத்தம் ஆகிய ஆறுகளின் வழியாக கோமுகி அணைக்கு வந்த சேருகிறது. இதனால் தொடர் மழை பெய்த ஒரு சில நாட்களிலேயே அணை நீர் மட்டம் கிடுகிடு என உயர்ந்து விடும். அணையின் மொத்த கொள்ளவான 46 அடியில் 44 அடிக்கு மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்படும். தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்தால், பாதுகாப்பு கருதி கோமுகி ஆறு வழியாக தண்ணீர் வெளியேற்றப்படும்.
அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் வெளியேற்றும் போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். அத்தருணங்களில் ஆற்றில் உள்ள ஏர்வாய்பட்டிணம், சோமண்டார்குடி, மோ.வன்னஞ்சூர், கருணாபுரம், பொரசக்குறிச்சி, விருகாவூர், சித்தலுார் உட்பட 11 தடுப்பணைகள் நிரம்பி வழிந்தோடும்.
ஒவ்வொரு தடுப்பணையில் இருந்தும் ஏரிகளுக்கு நீர் வரத்து ஏற்படும் வகையில் கிளை கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் ஏரிகள் நிரம்புகின்றன. தடுப்பணையில் தண்ணீர் தேங்கி நிற்பதால், நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்து கிணற்று நீர் பாசனத்திற்கும் வழிவகை செய்கிறது.
பருவ மழை காலங்களில் ஆண்டுதோறும் கோமுகி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். தற்போது ஆற்றின் நடுவே அதிகளவிலான மரம், செடி கொடிகள் வளர்ந்து புதர்கள் மண்டி அடர்ந்த காடுகள் போல காட்சியளிக்கிறது. சில இடங்களில் ஆற்றங்கரையோரம் கொட்டப்படும் குப்பைககளால், ஆற்றின் அகலம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் வரும் காலங்களில் கோமுகி ஆறு, ஓடையாகவும், கால்வாயாகவும் மாறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
கோமுகி ஆற்றில் பல இடங்களில் கரைகளும் பலவீனமாகவும் இருக்கிறது. சில நேரங்களில் பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாமல் குறையும் போது அணையில் இருந்து குறைவான அளவே தண்ணீர் திறந்து விடப்படும். அத்தருணத்தில் செடி கொடிகள் மரங்கள் வளர்ந்துள்ளதால் ஆற்றில் தண்ணீர் செல்வதில் பெரும் சிக்கல் ஏற்படும்.
கடந்த பல ஆண்டுகளாக கோமுகி ஆற்றில் எவ்வித சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. எனவே, கோமுகி ஆற்றின் உட்புறத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு, இரு கரைகளையும் பலப்படுத்திட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

