/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குறைகேட்புக் கூட்டம்: 1,002 மனுக்கள் குவிந்தன
/
குறைகேட்புக் கூட்டம்: 1,002 மனுக்கள் குவிந்தன
ADDED : ஜன 09, 2024 01:19 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் 2 வாரங்களுக்குப் பின் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 1,002 மனுக்கள் குவிந்தன.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். கடந்த டிசம்பர் 25 மற்றும் ஜனவரி 1 ஆகிய இரண்டு நாட்களும் அரசு விடுமுறை என்பதால் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவில்லை.
இந்நிலையில் 2 வாரங்களுக்குப்பின் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நேற்று குறைகேட்புக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார். முகாமில், பட்டா மாற்றம், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, தொழில் தொடங்க கடனுதவி உட்பட பல்வேறு துறைகள் சார்ந்த கோரிக்கைகளாக 1,002 மனுக்கள் பெறப்பட்டன.
மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
முன்னதாக நீரில் மூழ்கி இறந்த மற்றும் பாம்பு தீண்டி இறந்த 2 சிறுவர்களின் பெற்றோர்களிடம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.
மேலும், கை, கால் கடுமையாக பாதிக்கப்பட்ட 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பேட்டரியில் இயங்கும் நவீன சக்கர நாற்காலியும், 10 பேருக்கு தலா 3,000 ரூபாய் மதிப்புள்ள நவீன காதொலி கருவியும் வழங்கப்பட்டன.
கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ராஜலட்சுமி, மாவட்ட தாட்கோ மேலாளர் பியர்லின், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன் உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.