/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்டத்தில் ஆதார் சேவை மையங்களை அதிகரிப்பது... அவசியம்; சிரமத்திற்குள்ளாகும் மக்கள்; கலெக்டர் கவனிப்பாரா?
/
மாவட்டத்தில் ஆதார் சேவை மையங்களை அதிகரிப்பது... அவசியம்; சிரமத்திற்குள்ளாகும் மக்கள்; கலெக்டர் கவனிப்பாரா?
மாவட்டத்தில் ஆதார் சேவை மையங்களை அதிகரிப்பது... அவசியம்; சிரமத்திற்குள்ளாகும் மக்கள்; கலெக்டர் கவனிப்பாரா?
மாவட்டத்தில் ஆதார் சேவை மையங்களை அதிகரிப்பது... அவசியம்; சிரமத்திற்குள்ளாகும் மக்கள்; கலெக்டர் கவனிப்பாரா?
ADDED : அக் 25, 2025 06:53 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூடுதல் ஆதார் சேவை மையங்களை திறக்கவும், தற்போதுள்ள சேவை மையங்களில் கூடுதல் பணியாளர்களை நியமித்து திருத்த பணிகளை எளிதாக்கிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், உளுந்துார்பேட்டை, கல்வராயன்மலை, திருக்கோவிலுார், வாணாபுரம் ஆகிய 7 தாலுகாக்களில் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். பிள்ளைகளை பள்ளியில் சேர்த்தல், வங்கி கணக்கு தொடங்குதல், பாஸ்போர்ட், பான்கார்டு மற்றும் ரேஷன் கார்டு விண்ணப்பித்தல் போன்ற அனைத்து அரசு சார்ந்த சேவைகளை பெறவும், மத்திய, மாநில அரசு திட்டங்களில் பயனடைவதற்கும் ஆதார் கார்டு அவசியமாகிறது.
குறிப்பாக, ரேஷன் கடை மூலம் வழங்கப்படும் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற, குடும்ப அட்டைதாரர்கள் தங்களது கைவிரல் ரேகையினை பயோ மெட்ரிக் கருவியில் பதிவு செய்வது கட்டாயம்.
இதில், முதியோர்களின் கை ரேகை சரியாக பதிவாகுவதில்லை. இதனால் பயனாளிகளை தாலுகா அலுவலகத்தில் செயல்படும் ஆதார் மையத்திற்கு சென்று, கைரேகையை புதுப்பிக்குமாறு ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதவிர, புதிதாக ஆதார் கார்டு எடுப்பவர்கள், பழைய ஆதாரில் பெயர் மற்றும் முகவரி திருத்தம், மொபைல் எண் சேர்த்தல், புகைப்படம், கை ரேகை மற்றும் கருவிழி புதுப்பித்தல் உள்ளிட்டவைக்காக பொதுமக்கள் பலர் தங்களது பகுதிக்குட்பட்ட தாலுகா அலுவலகங்களுக்கு செல்கின்றனர்.
மாவட்டத்தில் 7 தாலுகா அலுவலகங்கள், 5 பி.டி.ஓ., அலுவலகங்கள், கள்ளக்குறிச்சி தலைமை அஞ்சலகம், தேசிய மயமாக்கப்பட்ட இரண்டு வங்கிகள், நகராட்சி அலுவலகம் என 16 இடங்களில் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
சின்னசேலம், பகண்டைகூட்ரோடு, கல்வராயன்மலை ஆகிய 3 பி.டி.ஓ., அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் துவங்கப்படவில்லை. தியாகதுருகம் பி.டி.ஓ., அலுவலகத்தில் ஆதார் சேவை மையத்திற்கான அனைத்து உபகரண பொருட்களும் தயார் நிலையில் இருந்தும், துவங்கப்படாமல் உள்ளது.
தினமும் நுாற்றுக்கணக்கானோர் ஆதார் கார்டில் திருத்தம் மேற்கொள்வதற்காக, இந்த 16 மையங்களுக்கு செல்கின்றனர். அங்கு டோக்கன் அடிப்படையில் பொதுமக்களிடம் விண்ணப்பம் பெறப்பட்டு, திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.
இதில், கள்ளக்குறிச்சியில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் தினமும் அதிகாலை 5:30 மணியளவில் டோக்கன் வழங்கப்படுகிறது. இதை பெறுவதற்காக வரும் பொதுமக்கள் அஞ்சல் அலுவலகத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
டோக்கன் கிடைக்கப்பெறாதவர்கள் மீண்டும் மறுநாள் வர வேண்டும். ஆதார் சேவை மையத்தில், நாள் ஒன்றுக்கு 30 முதல் 40 கார்டுதாரர்களுக்கு மட்டுமே திருத்தங்கள் மேற்கொள்ள முடியும்.
அதிலும் மின்நிறுத்தம், இணையதளத்தின் வேகம் குறைவு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டால் 25 திருத்தங்கள் மட்டுமே செய்ய முடியும். மீதமுள்ள மக்கள், மற்றொரு நாள் வர வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் பயணசெலவு, கால விரயம் உள்ளிட்ட காரணங்களால் மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
எனவே, உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார் நகராட்சி அலுவலகங்கள், சின்னசேலம், பகண்டைகூட்ரோடு, கல்வராயன்மலை பி.டி.ஓ., அலுவலகத்தில் ஆதார் சேவை மையங்கள் திறக்கப்பட வேண்டும். மேலும், தற்போதுள்ள ஆதார் சேவை மையங்களில், கூடுதல் பணியாளர்களை நியமித்து ஆதார் திருத்தங்களை அதிகரித்திட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

