/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க அறிவுறுத்தல்: தீவிரமாக கண்காணிக்க உத்தரவு
/
ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க அறிவுறுத்தல்: தீவிரமாக கண்காணிக்க உத்தரவு
ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க அறிவுறுத்தல்: தீவிரமாக கண்காணிக்க உத்தரவு
ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க அறிவுறுத்தல்: தீவிரமாக கண்காணிக்க உத்தரவு
ADDED : மே 10, 2024 01:49 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொது விநியோக திட்ட பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் பொருட்டு உணவு பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அரசு முதன்மை செயலர் அறிவுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட உணவுப் பொருள்கள் வழங்கும் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.
உளுந்துார்பேட்டை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகையில் நடந்த கூட்டத்திற்கு, அரசு முதன்மைச் செயலரும், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையருமான ஹர்சகாய் மீனா தலைமை தாங்கினார். கலெக்டர் ஷ்ரவன்குமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் அத்தியாவசிய பொருட்களின் நகர்வினை கண்காணித்திட வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் வீணாகாமல் தடுத்திடும் பொருட்டு, கடந்த 3 மாதத்தின் விற்பனை சராசரியினை கண்காணித்து தேவைக்கேற்ற பொருட்களை மட்டும் இருப்பில் வைத்திருக்க வேண்டும்.
அரிசி மூட்டைகளில் மாதந்தோறும் பயன்படுத்தப்படும் நுால்களின் நிறத்தின் விபரத்தை அறிந்து பொது விநியோகத்திட்ட பொருட்கள் நகர்வுகளை கண்காணிக்க வேண்டும். பொருட்களின் விலை மற்றும் இருப்பு விபரத்தினை நாள்தோறும் ரேஷன் கடையில் தகவல் பலகையில் காட்சிப்படுத்தி உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
அதேபோல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக வட்ட செயல்முறை கிடங்கிலிருந்து ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் நகர்வு செய்யும் போது வட்ட வழங்கல் அலுவலர்கள் கண்காணித்திட வேண்டும். பொருட்களின் எடை அளவை சரிபார்க்க வேண்டும்.
மேலும் குடிமைப் பொருள் தனி தாசில்தார்கள் ரேஷன் கடைகளில் தணிக்கை மேற்கொண்டு பொருட்களின் இருப்பு குறைவு, அதிகம் போன்ற இனங்களுக்கு அதற்கான அபராத தொகையினை விதிக்க வேண்டும்.
பொது விநியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பாமாயில், துவரம் பருப்பு, அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
அதேபோல் அரிசி அரவை மேற்கொள்ளும் ஆலைகளை தணிக்கை மேற்கொண்டு அரிசியில் ஏதேனும் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருடன் கூட்டாக தணிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர் (பொறுப்பு) ரமேஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் முருகேசன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் நந்தகுமார், உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு இன்ஸ்பெக்டர் மற்றும் குடிமைப் பொருள் தனி தாசில்தார்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.