/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம்... அமையுமா? திருக்கோவிலூர் பகுதி விவசாயிகள் அதிருப்தி
/
ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம்... அமையுமா? திருக்கோவிலூர் பகுதி விவசாயிகள் அதிருப்தி
ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம்... அமையுமா? திருக்கோவிலூர் பகுதி விவசாயிகள் அதிருப்தி
ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம்... அமையுமா? திருக்கோவிலூர் பகுதி விவசாயிகள் அதிருப்தி
ADDED : ஜன 25, 2024 04:22 AM
திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரியில் வளர்ச்சிப் பணி திட்டங்கள் கிடப்பில் போடப்படுவதற்கு அதிகாரிகள் காரணமா? அல்லது அரசியல்வாதிகள் காரணமாக என்ற கேள்வி எழுந்துள்ளது.
மன்னராட்சி காலத்தில் திருக்கோவிலுார் மலைய மாநாட்டின் தலைநகரம். மக்களாட்சி துவங்கிய நிலையிலும், கடலுாருக்கு அடுத்த தலைமை இடமாக திருக்கோவிலுார் திகழ்ந்தது. ஆனால் காலப்போக்கில் அரசியல் காரணங்களால் பின்னுக்கு தள்ளப்பட்டது.
மாவட்ட வருவாய் அலுவலகம், காலால் அலுவலகம், கூட்டுறவு சங்கத் தலைமை இடம் என பல ஊர்களுக்கு இடம்பெயர்ந்தது.
இதன் காரணமாக நகரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் பேரூராட்சி ஊராட்சியாக தரம் குறைக்கப்பட்ட சம்பவமும் நிகழ்ந்தது. இத்தனை இடர்பாடுகளையும் கடந்து தற்போதுதான் நகராட்சி அந்தஸ்தை எட்டிப் பிடித்துள்ளது.
அதற்கான அடிப்படை கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டிய இத்தருணத்தில், இதனைக் கருத்தில் கொண்ட அரசு ரூ.1.50 கோடியில் நவீன உழவர் சந்தை அமைக்க சட்டசபை மானிய கோரிக்கையின் போது அறிவிப்பை வெளியிட்டது.
இரண்டு ஆண்டுகளை கடந்து விட்ட போதும், இடத்தை தேர்வு செய்வதில் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் போட்டி போட்டுக் கொண்டு மாறி மாறி குறைகளை கூறி திட்டமே நிறைவேறாத அளவிற்கு காரணமாக இருந்து கேன்சல் செய்து விட்டனர்.
இதுதான் அப்படி என்றால் தற்போது ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் அமைப்பதிலும் அரசியல் உள் புகுந்து விட்டது. திருக்கோவிலுார் பி.டி.ஓ., அலுவலகத்தின் பின்புறத்தில் இயங்கி வந்த வேளாண்துறை அலுவலகம் இடிக்கப்பட்டு புதிய பி.டி.ஓ., அலுவலகம் கட்டப்படுவதால், அங்கிருந்து வேளாண்மை அலுவலகம் காலி செய்யப்பட்டு, வாடகை கட்டிடத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதுவும் வேளாண் துறை அலுவலகம் ஓரிடத்திலும், வேளாண் இடுபொருட்கள் விற்பனை செய்யும் இடம் மற்றொரு இடத்திலும் என விவசாயிகள் அலைகழிக்கும் வகையில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
இக்குறையை போக்கும் வகையில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதற்காக கீரனுார் பைபாஸ் அருகே இடமும் வருவாய்த் துறையால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. வேளாண் வணிகத்துறை மூலம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கு டெண்டரும் விடப்பட்டது. பணியை துவங்குவதில் அரசியல் உல்புகுந்து நிறுத்தப்பட்டு விட்டது.
திருக்கோவிலுார் நகரில் போக்குவரத்து அதிகரித்துவிட்ட நிலையில், தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்டிருக்கும் உயர்மட்ட பாலம் பழுதடைந்து, சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட நிலையில், இதன் ஆயுள் காலத்தை கடந்தும் பயன்பாட்டில் இருப்பதால் மாற்றாக கீழையூர் தரைப்பாலம் அருகே புதிய உயர்மட்ட பாலம் கட்ட கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் திட்ட பணிகள் தயாரிக்கப்பட்டது. டெண்டர் விடும் நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
வெற்றி பெற்று அமைச்சராக பொறுப்பு வகித்த பொன்முடியும் விரைவில் உயர்மட்ட பாலம் கட்டப்படும் என ஒவ்வொரு கூட்டத்திலும் அறிவித்தார். ஆனால் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து இரண்டரை ஆண்டுகள் கடந்து விட்டது. அதற்கான எந்த முன்னேற்றமும் இல்லை. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கேட்டால் டிசைனிங்கில் இருக்கிறது. என்ற ஒற்றை வார்த்தையுடன் முடித்து விடுகின்றனர். இதன் பின்னணியிலும் அரசியல் என்பதுதான் அசைக்க முடியாத உண்மை.
அரசின் திட்டங்கள் ஒவ்வொரு நிதியாண்டிலும் முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா? அப்படி இல்லை என்றால் அதற்கான முட்டுக்கட்டைகள் என்ன? அதனை தீர்த்து வளர்ச்சிப் பணி திட்டங்களை மேற்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் அவ்வப்போது அதிகாரிகளுடன் பேசி வந்தாலும், இதனை எல்லாம் மூடி மறைத்து விடுகின்றனர் அதிகாரிகள். அத்தியாவசிய திட்டங்களைகூட நிறைவேற்ற முடியாமல் திக்கி திணறும் திருக்கோவிலுாரில் அவலம் அரசுக்கு தெரியுமா? அல்லது தெரிந்தே அரசு அமைதி காக்கிறதா? என்ற கேள்வியை எழுப்புகின்றனர் திருக்கோவிலுார் பகுதி மக்கள்.