தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ நகராட்சியே குப்பைகளைக் கொட்டுவது நியாயமா? கோமுகி ஆறு குறுகி வரும் அபாயம்

நகராட்சியே குப்பைகளைக் கொட்டுவது நியாயமா? கோமுகி ஆறு குறுகி வரும் அபாயம்

நகராட்சியே குப்பைகளைக் கொட்டுவது நியாயமா? கோமுகி ஆறு குறுகி வரும் அபாயம்


UPDATED : ஆக 20, 2026 05:51 PM

ADDED : ஆக 20, 2026 05:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 20, 2026 05:51 PM ADDED : ஆக 20, 2026 05:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சி மின் மயானம் பின்புறம் கோமுகி ஆற்றங்கரையோரம் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுவதால் ஆற்றின் அகலம் படிப்படியாக குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் தியாகதுருகம் சாலையில் கோமுகி ஆற்றின் அருகே உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கொட்டப்பட்டு வந்தது.

அப்பகுதியில் குப்பைகளைக் கொட்ட பசுமை தீர்ப்பாயம் தடை உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து நகராட்சி சார்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மறுசுழற்சி செய்து உரம் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக மின் மயான வளாகத்தில் பசுமை உர பூங்கா அமைக்கப்பட்டது.

இப்பணிகளுக்காக நகராட்சியின் 21 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரித்து சேகரிக்கப்படுகிறது. இதில் மக்கும் குப்பைகளை மறு சுழற்சிக்குட்படுத்தி உரம் தயாரித்திடும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

ஆனால் மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் மின் மயானத்திற்கு பின்புறம் உள்ள கோமுகி ஆற்றங்கரையோரம் நகராட்சி துப்பரவு பணியாளர்களால் கொட்டப்படுகிறது.

தொடர்ந்து அந்த குப்பைகளை ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அவ்வப்போது நிரவப்பட்டு வருவதால் படிப்படியாக ஆற்றின் அகலம் குறைந்து வருகிறது.

சில நாட்களுக்கு முன் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் ஆற்றில் குப்பைகளை நிரவப்படுவதை சமூக ஆர்வலர்கள் கண்டித்தனர்.

வடக்கிழக்கு பருவ மழை காலங்களில் கோமுகி அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறக்க நேரிடும் போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரு கரையும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்.

இந்நிலையில் ஏற்கனவே, ஆற்றில் மணல் திட்டின்றி புதர்கள் மண்டியிருக்கும் நிலையில் தற்போது ஆற்றங்கரையோரம் குப்பைகளைக் கொட்டி நிரவப்பட்டு வருவது விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

கோமுகி ஆறு பொதுப்பணித் துறை (நீர்வளம்) கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அவர்கள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். நகராட்சியின் செயல்பாடுகளால் வரும் காலங்களில் ஆற்றில் தண்ணீர் மாசுபடுவதுடன், வெள்ளப் பெருக்கின் போது பெரும் பாதிப்படையும் சூழல் உள்ளது.

மேலும், மின் மயானத்தில் திறந்த வெளியில் மூட்டை மூட்டையாக கொட்டப்படும் குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.

இந்நிலையில், இறந்தவர்களின் உடலை இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்வதற்கு மின் மயானத்திற்கு கொண்டு செல்லும் போது அங்கு வீசும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து மாவட்ட மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதற்கிடையே தற்போது மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் அவ்வபோது இரவு நேரங்களில் தீ வைத்து எரிக்கப்படுகிறது.

அதிலிருந்து வெளியேறும் புகையால் வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. மக்காத பிளாஸ்டிக் குப்பைகளை தீ வைத்து எரிப்பதை தடுத்து, முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் கோமுகி ஆற்றங்கரையோரம் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க நகராட்சி நிர்வாகத்திற்கு கலெக்டர் உத்தரவிட வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us