உட்கோட்ட காவல் நிலையம் இரண்டாக பிரிக்கப்படுமா? திருக்கோவிலுார் மக்கள் எதிர்பார்ப்பு
உட்கோட்ட காவல் நிலையம் இரண்டாக பிரிக்கப்படுமா? திருக்கோவிலுார் மக்கள் எதிர்பார்ப்பு
UPDATED : ஆக 17, 2026 03:32 PM
ADDED : ஆக 17, 2026 01:40 PM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் அதிகரித்துவிட்ட பைக் திருட்டு, கனிமவள கொள்ளை மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளைக் கையாள புதிதாக காவல் நிலையத்தை உருவாக்குவதுடன், திருக்கோவிலுார் உட்கோட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. திருக்கோவிலுார் நகராட்சி அரும்பாக்கம், கீரனுார், வீரட்டகரம் என கிராமங்கள் வரை அதிகரித்துள்ளது. மக்கள் தொகையும் பன்மடங்கு அதிகரித்து விட்டது. அது மட்டுமல்லாமல் மாவட்ட பிரிப்பின் காரணமாக கொடியூர், குன்னத்துார், எல்ராம்பட்டு, வடமருதுார் என பல கிராமங்கள் திருவெண்ணைநல்லுாரில் இருந்து திருக்கோவிலுார் காவல் நிலையத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி எல்லை பிரிப்பு போல் ரிஷிவந்தியம் காவல் நிலைய எல்லையைத் தாண்டி, திருக்கோவிலுார் காவல் எல்லை வருகிறது. அதாவது நரிப்பாளையம், பெருங்குறிக்கை, வடுகப்பாளையம் என 25 கி.மீ., துாரத்திற்கு 75 கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்னை என்றால் போலீசார் விரைந்த கிராமங்களுக்கு சென்று விட முடியாது.
இதனால் மண் கடத்தல், கனிமவளக் கொள்ளை உள்ளிட்டவைகளை கண்காணிப்பதில் மட்டுமல்லாமல், 24 மணி நேர மதுபான விற்பனையை கட்டுப்படுத்துவதும் போலீசாருக்கு இயலாத காரியமாக உள்ளது.
எனவே பைக் திருட்டு, வீடு புகுந்து திருட்டு, பொதுமக்கள் புகாரின் பேரில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இது போன்ற சிக்கல்களை சீரமைக்க ஜி.அரியூரில் புதிதாக ஒரு காவல் நிலையத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதேபோல் திருக்கோவிலுார் காவல் உட்கோட்டத்தில் திருக்கோவிலுார் சட்டம் ஒழுங்கு காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம், மதுவிலக்கு காவல் நிலையம், சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டு, வடபொன்பரப்பி, மணலுார்பேட்டை, பகண்டை கூட்ரோடு, ரிஷிவந்தியம், திருப்பாலப்பந்தல் என 11 காவல் நிலையங்கள் உள்ளது. இவை அனைத்தையும் திருக்கோவிலுார் டி.எஸ்.பி.,யின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது.
அதிகரித்துவிட்ட மக்கள் தொகை, நகரமயமாக்கல் உள்ளிட்ட காரணங்களால் பணிச்சுமை அதிகரித்துள்ள நிலையில் திருக்கோவிலுாரில் இருந்து கல்வராயன்மலையை வரை செல்ல வேண்டியுள்ளது.
எனவே சங்கராபுரத்தை மையமாகக் கொண்டு வடபொன்பரப்பி, மூங்கில்துறைப்பட்டு, பகண்டைகூட்ரோடு காவல் நிலையங்களை உள்ளடக்கி மேலும் ஒரு உட்கோட்டத்தை உருவாக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.
மேலும், போக்குவரத்து போலீசாருக்கு சொந்த கட்டடம் இல்லாத சூழலில், கட்டை கோபுரம் அருகே கண்டெய்னரில் காவல் நிலையம் இயங்கி வருகிறது. இவர்கள் பறிமுதல் செய்யும் வாகனங்களும் சாலையில் பாதுகாப்பின்றி நிறுத்தப்படுகிறது. போலீசாரம் அமர்ந்து பணி செய்ய முடியாமல் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
சட்டம் ஒழுங்கு பிரச்னையை சிறப்பாக கையாளவும், கள்ளச்சாராயம், திருட்டு, கனிமவள கொள்ளை சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவும், திருக்கோவிலுாரில் புதிய காவல் நிலையத்தை உருவாக்குவதும், புதிய உட்கோட்டத்தை ஏற்படுத்துவதும், போக்குவரத்து போலீசாருக்கு சொந்த கட்டடம் கட்டிக் கொடுப்பதும் அவசியமாகியுள்ளது.
சட்டசபையில் போலீஸ் மானிய கோரிக்கையின் போது இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.
