போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதி... மாவட்ட நிர்வாகம் தீர்வு காண கோரிக்கை
போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதி... மாவட்ட நிர்வாகம் தீர்வு காண கோரிக்கை
UPDATED : ஜூன் 11, 2026 06:06 AM
ADDED : ஜூன் 10, 2026 04:10 PM

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் தினசரி போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள், வாகன ஓட்டுக்கள் கடும் அவதியடைந்து வருவதை தவிர்க்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
உளுந்துார்பேட்டை பகுதி சென்னை, மதுரை, திருச்சி, வேலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் மையப்பகுதியாக உள்ளது. இப்பகுதி வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளன. வாகன போக்குவரத்து அதிகரித்ததுபோல் சாலையோர ஆக்கிரமிப்புகளும் அதிகரித்தன.
ஆக்கிரமிப்பு அதிகரித்ததால் உளுந்துார்பேட்டை பஸ் நிலையம் அருகே உழவர் சந்தை பகுதியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் சாலையில், தாலுகா அலுவலகம் வரையிலான பகுதி மிகவும் குறுகிய சாலையாக மாறியது.
சாலையில் வியாபார கட்டடங்கள் கட்டியதால், 15 மீட்டர் அகல சாலை, தற்போது 8 மீட்டராக குறைந்துள்ளது. அத்துடன், சாலையிலேயே கடைகளை வைத்து வியாபாரம் செய்வதால், கடைக்கு வருபவர்களும் வாகனங்களை சாலைகளிலேயே நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் சாலையில் வாகனங்கள் எளிதில் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் பாதிப்பு ஏற்பட்டு தினசரி வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதியடைந்து வருகின்றனர். பள்ளி மாணவர்கள் மிகுந்த சிரமத்துடன் பள்ளிக்கு செல்வதால் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
உளுந்துார்பேட்டை பஸ் நிலையத்தில் திருச்சி பஸ்கள் நின்று செல்லும் பாதையில் வாகனங்களை நிறுத்துவதை தடுப்பதற்காக போக்குவரத்து போலீசார் பேரிக்காடுகள் அமைத்தனர். அவற்றையும் பொருட்படுத்தாமல் அவ்விடத்தில் வாகனங்களை நிறுத்துவதும், கடைகளை வைத்து பஸ்கள் செல்வதற்கு இடையூறு செய்து வருகின்றனர்.
ஆக்கிரமிப்புகளை தட்டி கேட்கும் பஸ் டிரைவர்களிடம், ஆக்கிரமிப்பாளர்கள் தகராறு செய்து மிரட்டுகின்றனர். பஸ் நிலையம் அருகே உள்ள திருவெண்ணைநல்லுார் செல்லும் சாலை பகுதியில் கடைக்கு முன்பு வாகனங்களை நிறுத்துவதற்காக போக்குவரத்து போலீசார் கயிறு கட்டி வைத்திருந்தனர். அதனையும், வாகன ஓட்டிகள், கடை உரிமையாளர்கள் பின்பற்றாததால் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டு வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைக்கு பொருட்களை வாங்க வருபவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு உரிய இடத்தை ஒதுக்கீடு செய்து தர வேண்டும். போக்குவரத்து போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். சாலையில் கார், வேன், பஸ்களை நிறுத்தி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்க வேண்டும்.
உளுந்துார்பேட்டையில் தொடரும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் போக்குவரத்து போலீசாரும், நெடுஞ்சாலைத்துறையினரும் இணைந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
