கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பு: சாலையில் வழிந்தோடும் தண்ணீர்
கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பு: சாலையில் வழிந்தோடும் தண்ணீர்
ADDED : ஏப் 03, 2026 08:02 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது.
கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் ரிஷிவந்தியம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்கான நீரேற்று உந்து நிலையம் மூலம் நகராட்சி பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு நீரேற்றம் செய்து நாள்தோறும் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலையோரம் எம்.ஆர்.என்., நகர் முன்பு கூட்டு குடிநீர் திட்ட பைப் லைனில் நேற்று முன்தினம் இரவு திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிலிருந்து ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வெளியேறி வீணாக சாலையில் வழிந்தோடுகிறது.
இதனால், கள்ளக்குறிச்சி பகுதியில் குடிநீர் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. சாலையில் வழிந்தோடும் தண்ணீரால் கனரக வாகனங்கள் செல்லும் போது, அருகில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது தண்ணீர் படுகிறது.
கூட்டு குடிநீர் திட்ட பைப் லைனில் உபைப்பு ஏற்பட்டு பல மணி நேரமாக தண்ணீர் வெளியேறி வரும் நிலையில், அதனை உடனடியாக சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, குடிநீர் பைப் லைனில் ஏற்பட்ட உடைப்பினை உடனடியாக சீரமைத்து தண்ணீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
